ஓசூர்: காதலியைக் கொன்று, ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது – கொலைக்கான காரணம் என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேரிகை அருகேயுள்ள நெரிகம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடசாமி மகள் பிரியங்கா (22). மாற்றுத்திறனாளியான இவர், ஓசூரிலுள்ள தனியார் வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். பேரிகை அருகே முதுகுறிக்கி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர் (24) என்பவர் பிரியங்காவை சில மாதங்களாக காதலித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று காலை பாகலூர் ராமன்தொட்டி வனப்பகுதியில் பிரியங்கா கழுத்தை நெரித்துக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். சடலத்தை மீட்ட பேரிகை போலீஸார், பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி, இந்தக் கொலை தொடர்பாக பிரியங்காவின் காதலன் ஸ்ரீதரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

பிரியங்கா

ஸ்ரீதர், தன் காதலி பிரியங்காவை நேற்று முன்தினம் மாலை, வெளியில் சென்று வரலாம் எனக் கூறி ராமன்தொட்டி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு அவர்கள், 2 பேரும் தனிமையில் இருந்தபோது, தகராறு ஏற்பட்டு ஸ்ரீதர் தன் காதலியைக் கொலைசெய்து தப்பியதுடன், வெங்கடசாமியை தொடர்பு கொண்டு, ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியது தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில், நேற்று பிரியங்கா கொலையில் மர்மம் உள்ளதாகக் கூறி, பிரியங்காவின் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும்’ என போலீஸார் உறுதியளித்தபின், உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்ரீதர்

லோன் கிடைக்காததால் கொலை!

இது குறித்து பாகலுார் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம். “பிரியங்கா தனியார் வங்கியில் லோன் பிரிவில் தற்காலிகப் பணியாளராக பணியாற்றி வந்தார். ஸ்ரீதர் பஸ்ஸில் ஓசூர் செல்லும்போது பிரியங்காவுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. பல நாள்களாக பர்சனல் லோன் வாங்கித் தருமாறு அவரிடம் ஸ்ரீதர் கோரிக்கை விடுத்து வந்திருக்கிறார். கொலைசெய்யப்பட்ட அன்று, தனியாகப் பேச வேண்டுமெனக்கூறி பிரியங்காவை அழைத்துக்கொண்டு பாகலுாரிலிருந்து, மூன்று கிலோ மீட்டரிலுள்ள அடர் வனப்பகுதியான ராமன்தொட்டி பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு லோன் தொடர்பாக பேசும்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு, கடன் கிடைக்காத விரக்தியில் கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கிறார். கொலைசெய்தபோது, பிரியங்காவின் மொபைல் போன் எடுத்துக்கொண்டு அன்று மாலை, கர்நாடக மாநிலம் கோலார் பகுதிக்கு தப்பிச்சென்றிருக்கிறார். அங்கு சென்றதும் பிரியங்காவின் போனிலிருந்தே, அவரின் தந்தையான வெங்கடசாமியை தொடர்பு கொண்டு, ‘உன்னுடைய மகளைக் கடத்தி விட்டேன், ரூ.10 லட்சம் கொடுத்தால் அவரை விடுவிப்பேன்’ எனக் கூறியிருக்கிறார். தகவல் கிடைத்ததும் செல்போன் சிக்னல் டவரைக் கண்காணித்து, ஸ்ரீதரை உடனடியாக கைதுசெய்தோம். சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. பிரியங்காவின் தந்தை பணம் அனுப்பினால் கூகுள் பே மூலம் தனது கணக்குக்கு மாற்றிவிட்டு, தப்பிவிடலாம் என நினைத்து பணம் கேட்டிருக்கிறார்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.