கடந்த ஆட்சியில் தரமற்ற சீரமைப்பு பணிகள் பொலிவிழந்த விழுப்புரம் நகராட்சி பூங்கா: மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சிறுவர்கள் கோரிக்கை

விழுப்புரம்: விழுப்புரத்தில் பொலிவிழந்து காணப்படும் நகராட்சிப்பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டுமென பொதுமக்கள், சிறுவர்கள் வலியுறுத்தியுள்ளனர். விழுப்புரம் நகராட்சியின் அடையாளமாக விளங்குவது நகராட்சி பூங்கா. 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பூங்கா நாளடைவில் முறையான பராமரிப்பில்லாமல் இருந்து வந்தது. நகரிலுள்ள 42 வார்டு பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாகவும் விளங்கி வந்தது. சிறுவர்கள் விளையாட்டு திடல், நடை பயிற்சி கட்டைகள், நீரூற்று என அனைத்து சிறப்பம்சங்களும் இருந்துவந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமூகவிரோதிகளின் கூடாரமாக விளங்கியது.

சாராய விற்பனை முதல் சூதாட்டம் வரை அனைத்து சமூக விரோத செயல்களும் நடந்து வந்தனார்.  கடந்தஅதிமுகஆட்சியில், 2 முறை நிதி ஒதுக்கீடு செய்து ரூ.75 லட்சத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நடைபயிற்சி கட்டைகள் அகற்றப்பட்டு புதிய கட்டைகள் போடப்பட்டன. மேலும் பூங்காவை பராமரிக்க ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர். பணிகளை ஒப்பந்தம் எடுத்த நபர் சரியாக செய்யாததால் சிலமாதங்களிலேயே கட்டைகள் பெயர்ந்தன. மேலும் பூங்காவை சுற்றியுள்ள சுவர்களை இடித்துவிட்டு இரும்பு கம்பிகள் அமைப்பது, நடைபயிற்சி கட்டைகளை அமைப்பது, விளையாட்டு திடல், நீரூற்று என மீண்டும் அந்த பணிகளே நடந்தன.

சிலஆண்டுகள்கூட தாக்குபிடிக்காமல், தரமற்ற பணிகளால் நடைபயிற்சி செல்லும் கட்டைகள் பல இடங்களில் பெயர்த்துக்கொண்டும், அங்கு பொருத்தப்பட்ட இரும்பு சேர்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக, சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட நீரூற்றுகள், ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் உடைந்த நிலையில் உள்ளது. மேலும், நடைபயிற்சி செல்லும் கட்டைகளும் சிலஇடங்களில் உடைந்து காணப்படுவதால், நடைபயிற்சி செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நகராட்சி பூங்காவை புனரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள், சிறுவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.