சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் மாநகராட்சி திமுக கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம் நாளை (ஜன.30) நடைபெறும் என விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1920-ம் ஆண்டு நகராட்சியாக அறிவிக்கப்பட்ட சிவகாசி, அதன் நூற்றாண்டு விழாவை கொண்டாடிய நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த சிவகாசி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதும் மேயர் பதவியை பெற்று விட வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயர் பதவி திமுகவிற்குத் தான் என்பதில் உறுதியாக இருந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது திமுக 32, காங்கிரஸ் 12, மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 1 என வார்டுகளை பங்கீடு செய்தார்.
இந்த தேர்தலில் திமுக 24, காங்கிரஸ் 6, மதிமுக, விசிக தலா 1 என திமுக கூட்டணி 32 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் திமுகவில் இணைந்ததாலும், சுயேச்சைகள் 4 பேர் ஆதரவு அளித்ததாலும் திமுகவைச் சேர்ந்த சங்கீதா சிவகாசி மாநகராட்சி மேயராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
எனினும், திமுக உட்கட்சி பூசல் காரணமாக மாதந்தோறும் நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடைபெற்று வந்தது. சிவகாசி மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடந்ததாக திமுக கவுன்சிலர் அளித்த புகாரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி முறை மன்ற நடுவம் ஆணையருக்கு உத்தரவிட்டது. இதை அடுத்து நகராட்சி அலுவலர்கள் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில், மாநகராட்சியில் முறைகேடு நடப்பதாக திமுக கவுன்சிலர் அளித்த புகார், தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், ”காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த சிவகாசியை திமுக விட்டுக் கொடுக்காததால் அக்கட்சி உறுப்பினர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க மாட்டார்கள் என மக்கள் நினைத்தனர். ஆனால் உட்கட்சி பூசல் காரணமாக மாநகராட்சியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு மாநகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்து உள்ளது. திருத்தங்கல், சிவகாசி என கவுன்சிலர்கள் இரு குழுக்களாகவும், மேயர் பதவியை எதிர்பார்த்து கிடைக்காதவர்கள் தனி அணிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் சிலர் அமைச்சருக்கு புகார் மனுக்களை அனுப்பினர். மாநகராட்சியில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கடந்த மாதம் இருமுறை ஆலோசனைக் கூட்டம் அறிவிக்கப்பட்டு வேறு சில பிரச்சனைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சி கவுன்சில் கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திமுக கவுன்சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மதிமுக கவுன்சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததார். இந்நிலையில், சிவகாசி மாநகராட்சியில் நிலவும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திமுகவில் நிலவும் உட்கட்சி கோஷ்டி பூசலுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு முற்றுப்புள்ளி வைப்பார்” என தெரிவித்தனர்.