புதுடெல்லி: டெல்லி பாஜகவின் செயற்குழு கூட்டம் டெல்லியில் 2-வது நாளாக நேற்று நடைபெற்றது. இதில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் பேசியதாவது:
டெல்லியில் கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சாலை உள்கட்டமைப்புப் பணிகள் முதல் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்துவது வரை ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் நிதி வழங்கி உள்ளது. ஆனால், டெல்லி அரசு ஊழலின் மையமாக விளங்குகிறது. டெல்லி ஆட்சியாளர்களின் ஊழலை பாஜக விரைவில் அம்பலப்படுத்தும். டெல்லியில் ஆளும் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசை வேரறுப்பது என இன்று நாம் புதிய தீர்மானம் எடுத்துக் கொள்வோம்.
இதன்படி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளை பொதுமக்கள் மத்தியில் எடுத்துக் கூறுவோம். வரும் 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 2025-ல் நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு அனுராக் தாக்குர் தெரிவித்தார்.