நாமக்கல்: "எம்.எல்.ஏ, அமைச்சர் என்பதையெல்லாம் தாண்டி, உங்கள் வீட்டுச் செல்லப்பிள்ளை நான்!" – உதயநிதி

நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெற்ற அரசு விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டதோடு, ரூ.23.71 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.351.12 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,321 பயனாளிகளுக்கு ரூ.303.37 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, “நாமக்கல் என்றாலே உடனே நினைவுக்கு வருவது லாரிகள்தான். லாரி இல்லாத வீடே இல்லை, அவ்வளவு ஏன் நாமக்கல் லாரிகள் ஓடாத தமிழ்நாட்டின் வீதிகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு சுமார் 60,000 லாரிகள் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே இருக்கின்றன.

மேடையில் பேசும் உதயநிதி

அதேபோல், நாமக்கல் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது, நம்முடைய நாமக்கல் கவிஞர்தான். ‘தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்று உரிமைக் குரலாக ஒலித்தவர்தான் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்.

அத்தகைய நாமக்கல் கவிஞர் பெயரிலான 10 மாடி பிரமாண்ட கட்டடத்தில்தான் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டையே இயக்கும் தலைமைச் செயலக அலுவலக இருக்கும் கட்டடத்துக்குப் பெயர் நாமக்கல் கவிஞர் மாளிகை என்பது பலருக்கும் தெரியும். அந்தப் பெயரை வைத்து நாமக்கல் கவிஞருக்கும், நாமக்கல் மக்களுக்கும் பெருமையை தேடித் தந்தவர் நம் தலைவர் கருணாநிதி. 1989-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில்தான் நாமக்கல் கவிஞர் மாளிகை என பெயர் வைத்தார். இன்னும் பல பெருமைகளும், உழைக்கும் மக்களும் நிறைந்த நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு சார்பிலான இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களை எல்லாம் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். நாம் ஆட்சி அமைத்தபோது கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்தது. வழக்கமான நோய்களுக்குக்கூட சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் செல்ல பயந்த சூழல்.

நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வு

அதை ஈடுகட்டும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை நம் முதல்வர் தொடங்கிவைத்தார். இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்ட மருந்து பெட்டகங்கள் பயனாளிகளிடம் சென்று சேர்ந்திருக்கின்றன. 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்படும் மகத்தான திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1,16,000 பேர் பயனடைகின்றனர். நாமக்கல்லிலும் ஆயிரக்கணக்கானோர் இந்தத் திட்டத்தில் பயன்பெற்றிருக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் 88.02 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியது, இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 இப்படி எண்ணற்றத் திட்டங்களை பட்டியலிட்டுக்கொண்டே போக முடியும். ராசிபுரம் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான பட்டு ஏலம் மையம் அமைக்கப்பட்டு, இதுவரை 7 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக இந்த மையத்தின் மூலம் பட்டு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் கட்ட 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அ.தி.மு.க ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மோகனூர் சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தித் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, ரூ.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்படவிருக்கின்றன. இப்படி, நாமக்கல் மாவட்டத்துகாணப் பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

பொற்கிழி வழங்கும் நிகழ்வு

இந்த சாதனைகள் எல்லாம் கடந்த 18 மாதங்களில் திராவிட மாடல் முதல்வர் தமிழ்நாட்டுக்கு, நாமக்கல்லுக்கு கொண்டு வந்த திட்டங்கள். வரும் காலங்களில் இன்னும் எண்ணற்ற பல திட்டங்கள் நாமக்கல்லுக்கு கிடைக்கவிருக்கின்றன. உங்களுக்காக உழைக்கும் அரசாக இந்த அரசு உள்ளது. நம் முதல்வர் சொல்வதைப் போல், இது அனைவருக்குமான அரசு. இந்த திராவிட மாடல் அரசால் நாமக்கல் இன்னும் செழுமையாக்கட்டும் என வாழ்த்தி, இந்த நிகழ்ச்சியில் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வுகாண முழு முயற்சி மேற்கொள்வேன். நான் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என்பதை தாண்டி உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாகவும், உங்கள் சகோதரனாகவும் என்றும் இருப்பேன்” என்றார்.

தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, திருச்செங்கோடு சாலையிலுள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் கழக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதேபோல், மாலை திருச்செங்கோட்டில் மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நடைபெற்ற கழக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் கலந்துகொண்ட உதயநிதி,

பொற்கிழி பெற்ற தி.மு.க மூத்த உறுப்பினர்கள்

“எனக்கு திருச்செங்கோடு தேரை நினைவுப் பரிசாக வழங்கியிருக்கின்றனர். திருவாரூரில் ஓடாத தேரை ஓட வைத்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர். கழக மூத்த முன்னோடிகளை பெருமைப்படுத்த வேண்டும், அவர்களுக்கு பொற்கிழி வழங்க வேண்டும் என்று கேட்டு, 22 மாவட்டங்களுக்கு மேலாகச் சென்று வந்திருக்கிறேன். உங்கள் முகங்களைப் பார்த்தபோது, எனக்கு தானாக தெம்பு வந்துவிட்டது. நாமக்கல் மேற்கு மாவட்ட முதல் நிகழ்ச்சியே கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி. நானும் முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினர், அமைச்சராகி இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். கழக மூத்த முன்னோடிகளை என்றும் மறக்கவே மாட்டோம். நான் பெரியாரை, அண்ணாவைப் பார்த்தது கிடையாது. ஆனால், அவரின் பேச்சையும், புத்தகங்களையும் படித்திருக்கிறேன். கலைஞர் மற்றும் பேராசிரியர் ஆகியோரோடு பழகியிருக்கிறேன். அவர்களது பேச்சையும் கேட்டிருக்கிறேன். ஆனால், கழக மூத்தவர்களான நீங்கள் அனைவரையும் பார்த்திருப்பார்கள். ஆகையால், உங்களைப் பார்க்கும்போது எனக்கே பொறாமையாக இருக்கிறது. இளைஞர் அணியில் வங்கியில் சேமிப்பிலுள்ள 24 கோடி ரூபாயிலிருந்து கிடைக்கும் வட்டிப் பணம் 10 லட்சம் ரூபாயை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.