கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியை சுற்றியுள்ள 12 கிராமங்களில் நிலக்கரி வளங்களை மதிப்பிடும் பணியை மத்திய சுரங்கத்துறை மேற்கொண்டு வருவது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டங்களை கைவிட வேண்டும் என்று கடலூர் மாவட்ட மக்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், நெய்வேலி என்எல்சி சுரங்கம் அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள வீராணம் ஏரி பாசன பகுதி நிலங்களில் (12 கிராமங்களின் நிலம்), நிலக்கரி வளங்களை மதிப்பிடும் பணியை மத்திய சுரங்கத்துறை மேற்கொண்டு இருக்கிறது.
சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் ஆகிய 3 தாலூக்காவிற்கு உட்பட்ட புத்தூர், ஆட்கொண்டநத்தம், மோவூர், ஓமம்புலியூர், தவர்த்தாம்பட்டு உள்ளிட்ட 12 கிராமங்களில் மிக அதிக அளவில் நிலக்கரி வளம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வீராணம் பகுதியில் உள்ள நிலக்கரி வளத்தின் துல்லியமான அளவு என்ன? அவற்றின் வெப்பத்திறன் என்ன? என்பதை கண்டறியும் பணியில் எம்.இ.சி.எல். எனப்படும் தாதுவளம் கண்டுபிடிப்பு மற்றும் ஆலோசனை நிறுவனத்தை (MINERAL EXPLORATION AND CONSULTANCY LTD) மத்திய அரசின் சுரங்கத்துறை ஈடுபடுத்தியுள்ளது.
இதற்காக சுமார் 200 இடங்களில் மண் மற்றும் நீர் ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய சுரங்கத்துறையின் இந்த பணிக்கு பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தற்போது அந்த ஆய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் வீராணம் பகுதியில் நிலக்கரி சுரங்கமா? அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்!#DrAnbumaniRamadoss #PMK #Veeranam #NLC #CentralGovt #Politics #Chennai #Tamilnadu #Seithipunalhttps://t.co/Ve4HOtF3cs
— Seithi Punal (@seithipunal) January 29, 2023