ஜம்மு: கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர்களை குறிவைத்து கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.
பாரத ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் நேற்று புல்வாமா பகுதியை சென்றடைந்தார். அப்போது அவர், சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த இடத்தில் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அண்மையில் கூறும்போது, “புல்வாமா தாக்குதலுக்கு மத்திய அரசே காரணம். இதுநாள் வரை புல்வாமா தாக்குதல் குறித்து நாடாளு மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் உள்ளதா’’ என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து காங்கிரஸ் கூறும்போது, ‘‘அது அவரது தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்து அல்ல’’ என்று தெரிவித்தது. இந்த சூழலில் புல்வாமாவில் உயிரிழந்த வீரர்களுக்கு ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தியது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.