மும்பை: மும்பையில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation) திரைப்பட விழாவிற்கிடையே “இந்தியா – எஸ்சிஓ ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்” குறித்த வட்டமேசை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ”மும்பையில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழாவிற்கிடையே ‘இந்தியா – எஸ்சிஓ ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்’ குறித்த வட்டமேசை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தகவல், ஒலிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மற்றும் இன்வெஸ்ட் இந்தியா திரைப்பட வசதி அலுவலகம் ஆகியவற்றின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமர்வுக்கு, தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நீரஜா சேகர் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் (திரைப்படங்கள்) மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர் பிரிதுல் குமார் ஒருங்கிணைத்தார். எஸ்சிஓ உறுப்பு நாடுகள் திறமை பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும், இந்தியாவுடனான இணை தயாரிப்பு ஒப்பந்தங்களைக் கண்டறியவும், கூட்டுத் திட்டங்கள் மூலம் தற்போதுள்ள இந்திய திரைப்பட ஊக்குவிப்புகளின் பலன்களைப் பெறவும் இந்த அமர்வில் வலியுறுத்தப்பட்டது.
இந்தியா தற்போது சீனா மற்றும் ரஷ்யாவுடன் இருதரப்பு ஆடியோ-விஷுவல் இணை தயாரிப்பு ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது. தஜிகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற உறுப்பு நாடுகளுடன் இணைந்து தயாரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டன. கடந்த 6 ஆண்டுகளில் ஒரு இந்திய-சீன இணை தயாரிப்பும், ஒரு இந்திய-ரஷ்ய இணை தயாரிப்பும் உள்ளது.
சீனாவுக்கு 5, ஈரானுக்கு 2, கஜகஸ்தானுக்கு 1, நேபாளத்துக்கு 1, ரஷ்யாவுக்கு 2, இலங்கைக்கு 1, துருக்கிக்கு 1 என எஸ்சிஓ நாடுகளின் பல திரைப்படங்களுக்கு இந்தியாவில் படப்பிடிப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு இந்தியப் படங்கள் கிட்டத்தட்ட அனைத்து உறுப்பு நாடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வெளிநாட்டு உற்பத்தி மற்றும் அதிகாரப்பூர்வ இணை தயாரிப்புகளுக்கான ஊக்கத்தொகையின் அடிப்படையில் ஒட்டுமொத்த சூழலை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவதும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும் வட்டமேசையின் முக்கிய நோக்கமாகும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.