சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணியாற்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த ஜேசிடி பிரபாகர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள பன்னீர்செல்வம் இல்லத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளுக்காக, முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர்கொண்ட தேர்தல் பணிக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் அமைத்துள்ளார்.
இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக இருந்தால் முழு ஆதரவு தெரிவிக்கப்படும் என்று ஏற்கெனவே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அவர்கள் எப்போது வேட்பாளரை நிறுத்தினாலும் தேர்தல் பணியாற்ற இக்குழு தயாராகஉள்ளது. தேர்தலில் போட்டியிடவில்லை என்று பாஜக முடிவெடுத்தால், பன்னீர்செல்வம் உறுதியாக வேட்பாளரை நிறுத்துவார்.
பாஜக போட்டியிட வேண்டும்: இந்த இடைத்தேர்தலில் தேசியகட்சியான காங்கிரஸ் போட்டியிடுவதால், அதை எதிர்த்து பாஜக போட்டியிடுவது பொருத்தமாக இருக்கும். பாஜகவின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்களின் பதிலுக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதாவுடன் பணியாற்றியவர் பன்னீர்செல்வம்.
எதை எப்படி, எப்போது செய்யவேண்டும் என்று பன்னீர்செல்வத்துக்கு தெரியும். தொகுதிக்கு உள்ளேயும், வெளியேயும் ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர். வேட்பாளர் குறித்த நல்ல முடிவை பன்னீர்செல்வம் எடுப்பார். தேர்தல் ஆணைய பதிவுகளின் படி பன்னீர்செல்வம் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.
இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த பழனிசாமி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதனால் இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலைசின்னம் எங்களுக்குதான் கிடைக் கும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ கூறும்போது, ‘‘ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு, கடந்த ஜூலையில் பழனிசாமி நடத்திய பொதுக்குழு தொடர்பானது. இப்போது முறையிட்டு இருப்பது இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக. எனவே இரண்டும் வெவ்வேறு வழக்குகள்’’ என்றார்.