சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி இளங்கோவன் என்பவர் பெரியாரின் மார்பளவு சிலையை புதிதாக கட்டிய தனது வீட்டின் முன்பு நிறுவியுள்ளார். இளங்கோவன் தனது சொந்த பட்டா இடத்தில் பெரியார் சிலையை அமைத்துள்ளதாக வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு புகார் சென்றுள்ளது.
இதற்கு இளங்கோவன் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு விளக்கம் அளித்துள்ளார். இதனையும் மீறி இன்று காலை இளங்கோவின் வீட்டிற்கு சென்ற வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் பெரியாரின் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளங்கோவன் கோஷம் எழுப்பியதோடு சிலை உடைத்து எடுக்கப்பட்ட இடத்தில் “இந்த இடத்தில் இருந்த தந்தை பெரியார் சிலையை சட்டவிரோதமாக வருவாய் மற்றும் காவல்துறை அகற்றியது” என பேனர் வைத்தார். இதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சம்பவ இடத்தில் அரசு அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பெரியார் சிலையை அகற்றிய அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வருவாய் வட்டாட்சியராக பணிபுரிந்த கண்ணன் சிவகங்கை வனத்திட்ட அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோன்று தேவகோட்டை டிஎஸ்பியாக பணிபுரிந்த கணேஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இன்று காலையில் பெரியார் சிலை அகற்றிய விவகாரம் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளும் மாலைக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.