இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் 343 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து தென்ஆப்பிரிக்கா வெற்றி

புளோம்பாண்டீன்,

இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புளோம்பாண்டீன் நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 342 ரன்கள் சேர்த்தது. ஹாரி புரூக் 80 ரன்களும் (75 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ஜோஸ் பட்லர் 94 ரன்களும் (82 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), மொயீன் அலி 51 ரன்களும் விளாசினர்.

அடுத்து 343 ரன்கள் இலக்கை நோக்கி களம் புகுந்த தென்ஆப்பிரிக்கா 49.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 347 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த மைதானத்தில் வெற்றிகரமாக விரட்டிபிடிக்கப்பட்ட (சேசிங்) அதிகபட்ச இலக்கு இது தான். உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா 109 ரன்கள் (102 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து அசத்தினார். கடைசி கட்டத்தில் டேவிட் மில்லர் 58 ரன்களும், மார்கோ ஜேன்சன் 32 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென்ஆப்பிரிக்கா2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 1-ந்தேதி நடக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.