புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு ஆற்றும் முதல் உரை என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.
அன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.
இந்த சூழலில் மத்திய பட்ஜெட் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய பட்ஜெட் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில் அந்த அமைப்பின் மாநாடுகளை வெற்றிகரமாக நடத்துவது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்தாலோசித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் 9 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.