அண்ணாமலைக்கு புதிய பதவி ஏன்? டெல்லியை தன் பக்கம் திருப்பிய ரகசியம்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கர்நாடக மேலிட இணைப் பொறுப்பாளர் பதவியை கூடுதலாக வழங்கி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வழங்கியுள்ளார்.

பாஜகவை பொறுத்தவரை ஒவ்வொரு மாநில தேர்தல் சமயங்களில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்காக மேலிட பொறுப்பாளர்களை நியமிப்பது வழக்கம்.

இந்த மேலிட பொறுப்பாளர்கள் டெல்லி தலைமையின் முகங்களாக இருப்பார்கள். மாநில நிர்வாகிகளுடன் இணைந்து இவர்கள் தலைமையில் கூட்டணிக் கட்சிகளிடம் ஆலோசித்து பாஜகவுக்காக தொகுதிகளை இறுதி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். இவர்கள் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பர்.

உதாரணத்திற்கு தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளராக சி.டி.ரவி இருக்கிறார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தான் தேர்தல் சமயத்தில் தமிழக கூட்டணிக் கட்சிகளை சந்திக்கிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் விவகாரத்தில் நேற்றுகூட ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

தற்போது கர்நாடக மாநிலம் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. எனவே கர்நாடக மாநில பாஜக மேலிட பொறுப்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி மேலிட பொறுப்பாளராக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும், இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பாஜகவின் பணிகளை தலைமை தாங்கி மேற்கொள்வதோடு கூடுதலாக இந்த பணி அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு ஏன் இந்த பதவி வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரித்தோம்.

அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணியாற்றியவர். எனவே அவருக்கு கர்நாடகாவின் அரசியல் தட்பவெப்ப நிலைகள் தெரியும் என பாஜக தலைமை நம்புகிறது.

தமிழ்நாட்டில் பாஜக தலைவராக மிகக் குறுகிய காலத்தில் தேசிய தலைமை மூலம் கொண்டு வரப்பட்டவர். பதவியேற்றதிலிருந்து ஏதேனும் ஒரு விதத்தில் பாஜகவை தொடர்ந்து லைம் லைட்டில் வைத்து வருகிறார் என்று அண்ணாமலை குறித்து மேலிடம் பாசிட்டிவான அபிப்ராயம் கொண்டுள்ளதாம். அதே சமயம் அவர் இளைஞர், நேரடி அரசியல் அனுபவம் குறைவு. எனவே தான் அவருக்கு மேலிட பொறுப்பாளர் பதவி வழங்காமல், இணை பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

உதயநிதி செலக்ட் செய்த அந்த அதிகாரி: இது பக்கா ஸ்டாலின் ஃபார்முலா!

கர்நாடக தேர்தல் பணிகளில் அவர் இணைந்து பணியாற்றினால் வருகிற மக்களவைத் தேர்தலிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் இந்த அனுபவம் அவருக்கு கை கொடுக்கும். தமிழக பாஜகவை வழிநடத்துவதற்கும் இது உதவியாக இருக்கும் என மேலிடம் கருதுவதாக சொல்கிறார்கள்.

அண்ணாமலைக்கு எதிராக கட்சிக்குள் சீனியர்கள் புகைச்சலில் இருக்கிறார்கள் என்ற விமர்சனத்தையும், காயத்ரி ரகுராம் போன்றோரின் குற்றச்சாட்டுகளையும் டெல்லி தலைமை கேட்க தயாராக இல்லை என்பதையே இந்த கூடுதல் பதவி நியமனம் காட்டுவதாக சொல்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.