தூத்துக்குடி மாவட்டத்தில் 10 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே தாய்விளைப் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி தேவராஜ்(38). இதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தாய்க்கு தண்ணீர் கொடுத்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தாள்.
இந்நிலையில் அவ்வழியாக வந்த தேவராஜ், சிறுமியின் வாயை பொத்தி அருகில் இருந்த காட்டுப் பகுதிக்குள் தூக்கி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் சிறுமி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
இதைப் பார்த்த தேவராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் தேவராஜை கைது செய்தனர்.