கரூர் மாவட்டத்தில் தைப்பூசத்தையொட்டி மைக் செட் கட்டியபோது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் வெங்கமேடு பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன் எலக்ட்ரீசியன் நவீன் குமார்(27). இவர் கரைப்பாளையம் பகுதியில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று காலை நவீன் குமார் மைக் செட் கட்டுவதற்காக கரைப்பாளையம் விநாயகர் கோவில் கோபுரத்தின் மீது நின்று ஒயரை வீசியுள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த கம்பியில் ஒயர் பட்டதால், மின்சாரம் தாக்கி கோவில் கோபுரத்தில் இருந்து நவீன் குமார் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக நவீன் குமாரை மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே நவீன் குமார் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் நவீன் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.