பரந்தூரில் விமான நிலைய எதிர்ப்புகளுக்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும்: மத்திய அமைச்சர் ஜோதி ராதித்யா சிந்தியா

சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும். விமான நிலையம் அமைக்க எழுந்துள்ள எதிர்ப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜோதி ராதித்யா எம்.சிந்தியா தெரிவித்தார்.

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட், அதில் இருக்கக்கூடிய சாராம்சங்கள் பற்றி மத்திய அமைச்சர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று சென்னை வந்த மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி ராதித்யா எம்.சிந்தியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய விமான நிலைய பணிகள்: உலக அளவில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்திய வளர்ச்சி அடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா மிக சிறப்பாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 3 வது ஆண்டாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் 8 ஆண்டுகளில் 73 புதிய விமானநிலையங்கள் மற்றும் ஹெலிபேட்கள் கட்டப்பட்டுள்ளன. 2030-ம் ஆண்டில் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக உயர்வதற்கு இந்த பட்ஜெட் உதவும். பரந்தூரில் புதிய பசுமை விமானநிலையம் உறுதியாக அமைக்கப்படும். அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அனைத்தும் மாநில அரசுதான் செய்ய வேண்டும். விமானநிலையம் அமைக்க எழுந்திருக்கும் எதிர்ப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மாநில அரசுதான் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பன்னடுக்கு வாகன நிறுத்தும் இடத்தை மத்திய அமைச்சர் ஜோதி ராதித்யா எம். சிந்தியா திறந்து வைத்தார்.

2.5 லட்சம் சதுர அடியில் 6 தளங்கள் கொண்ட வாகன நிறுத்துமிடத்தில் 2,150 கார்கள் நிறுத்த முடியும். மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் செய்யும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த வாகன நிறுத்தத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்ச்சியில், ஜோதிராதித்யா எம். சிந்தியா பேசும்போது, “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், குஜராத் முதல் அருணாச்சல பிரதேசம் வரையும் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம். 2014-ல் சென்னையில் 34 நகரங்களை இணைக்கும் விமான சேவைஇருந்தது.

தற்போது 61 நகரங்களை இணைக்கும் விமான சேவையாக மாறியுள்ளது. உள்நாட்டு விமான நிலையங்களின் வளர்ச்சி 19 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த உணவுகள் விமான நிலையங்களில் வழங்கப்படுகிறது. விமான நிலையத்தின் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் வரும் காலங்களில் மேம்படுத் தப்படும்” என்றார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசும்போது, “உடான்திட்டத்தால் சாதாரண குடிமகன் இன்றைக்கு விமானத்தில் போகக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் இப்போது இருக்கின்ற விமான நிலையங்களைவிட இரண்டு மடங்கு அதிகரிக்கப்படும். நம் நாடும், தமிழகமும் தொழில் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது.

அதற்கு அடிப்படை கட்டமைப்பு மற்றும் பிரதமரின் முயற்சியே காரணம்” என்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் சஞ்சீவ்குமார், சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.