கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளவாடப் பகுதிகளின் வான்பரப்பில் மர்ம பலூன் ஒன்று தென்பட்டது. அந்த நொடி முதல், மர்ம பலூன் பற்றிய சந்தேகங்களும், சர்ச்சைகளும் மேலோங்க தொடங்கின. `சீனா, எங்கள் நாட்டை உளவு பார்க்க இந்த பலூனை அனுப்பியிருக்கிறது’ என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. உலக நாடுகள் இந்த விவகாரத்தை உற்று நோக்கிவரும் நிலையில், சனிக்கிழமை (04/02/2023) அன்று சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்திவிட்டதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு முதலில் மறுப்பு தெரிவித்த சீனா பின்னர், ‘வானில் பறந்த பலூன் எங்களுடையதுதான்… வானிலை ஆய்வுக்காகப் பறக்கவிடபட்ட பலூன், காற்றின் வேகம் மாறுபடுதல் காரணமாக திசை மாறி அமெரிக்காவுக்கு சென்றுவிட்டது’ என விளக்கமளித்தது. சீனாவின் விளக்கத்தை ஏற்க மறுத்த அமெரிக்கா, தனது கடும் கண்டனங்களை, இந்த விவகாரத்தில் பதிவுசெய்திருக்கிறது.

மேலும், இந்த பலூன் விவகாரம் எதிரொலியாக, அமெரிக்க வெளி விவகாரத்துறை அமைச்சர் பிலிங்கனின் சீனப் பயணமும் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.
வானில் மர்ம பலூன் தென்பட்ட நொடியே, பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்கப் போர் விமானங்கள் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது. பலூன், எதிர்பார்த்ததைவிட அளவில் மிகப்பெரியதாக இருந்ததால், சுட்டு வீழ்த்திய பிறகு அமெரிக்காவின் நிலப்பரப்பில் பலூன் விழும் பட்சத்தில், மிகப்பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், சுட்டு வீழ்த்தாமல் தொடர் கண்காணிப்பிலிருந்து வந்தது அமெரிக்கா. நேற்றைய தினம் (04/02/2023) அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவின்படி, பலூன் தெற்கு கரோலினா பகுதியை ஒட்டிய கடற்பகுதியில் பறந்தபோது, பலூனை சுட்டு வீழ்த்திவிட்டதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. இந்தத் தகவலை அமெரிக்காவின் ராணுவ அமைச்சரான லாய்ட் ஆஸ்டின் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க ராணுவத்தின் இந்தச் செயலுக்கு, அதிபர் ஜோ பைடன் பாராட்டுகள் தெரிவித்திருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மூன்று விமான நிலையங்கள் மூடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடலில் விழுந்த பலூனின் பாகங்களைக் கொண்டு ஆய்வு செய்யப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் இத்தகைய செயலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.