நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்றுவதற்கு முழு முயற்சி மேற்கொள்வேன் என புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த மா.அரவிந்த் மாற்றப்பட்டு மருத்துவ சேவை கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை – கன்னியாகுமரி தொழில்தட திட்ட இயக்குநராக இருந்த பி.என்.ஸ்ரீதர், குமரி மாவட்டத்தின் 52வது ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவர் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், ”கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் இன்னும் சிறப்பாக செயல்படுத்த தனி கவனம் செலுத்தப்படும். அதேநேரத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும். பொதுமக்களின் குறைகள் தீர்ப்பதற்கு அனைத்துத்துறை அலுவலர்களுடன் இணைந்து உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், வளர்ச்சிப் பணிகள், மக்கள் சேவைகள், குறைதீர்க்கும் பணிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் தனி கவனம் செலுத்தி அவற்றிற்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நகர்புற பகுதிகள் அதிகம். எனவே, நகர்புற நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல், வனம், சுற்றுலா, மீன்வளத் துறை உள்ளிட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் கன்னியாகுமரி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்றுவதற்கு முழு முயற்சி மேற்கொள்வேன்” என்றார்.
கன்னியாகுமரி மாவட்ட புதிய ஆட்சியர் ஸ்ரீதரிடம், இதுவரை ஆட்சியராக இருந்த மா.அரவிந்த் பொறுப்புகளை ஒப்படைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.அ.சிவப்பிரியா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக், இ.ஆ.ப., நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.