செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கி இருந்த சிறுவன் செல்வன் கோகுல்ஸ்ரீ 31-12-2022 அன்று மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, சிறுவனின் தாயார் பிரியாவுக்கு, க/பெ. பழனி (லேட்) இழப்பீடாக 7.5 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவியாக ரூபாய் 2.5 லட்சம் ரூபாயும் என மொத்தம் 10 லட்சம் ரூபாய் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டு உள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தாயார் பிரியாவுக்கு தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், அன்னை அஞ்சுகம் நகர் திட்டப்பகுதியில் தற்போது கட்டப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு குடியிருப்பினை ஒதுக்கீடு செய்யவும் ஆணை பிறப்பித்து உள்ளார்.

இளைஞர் நீதி அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சார்பாக ஒரு பிரதிநிதியும் உள்ளடக்கிய உயர்மட்டக் குழு ஒன்று உருவாக்கப்படும்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.