டெல்லி கிளம்பிய தமிழ் மகன் உசேன்: தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கப் போகிறது?

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வழங்கிய படிவங்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பதற்காக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லி கிளம்பினார்.

இரட்டை இலை சின்னத்தின் உரிமை கேட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளரை பொதுக் குழுவைக் கூட்டி முடிவு செய்யுங்கள். பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரையும் அனுமதிக்க வேண்டும். அவைத் தலைவர் பொதுக் குழுவைக் கூட்ட வேண்டும். பொதுக்குழு முடிவு செய்யும் வேட்பாளரை அவைத் தலைவர் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.அவைத் தலைவரின் பரிந்துரை மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்” என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் படிவம் ஒன்றை அனுப்பினார். அதில் வேட்பாளராக தென்னரசுவை வேட்பாளராக அறிவித்திருந்தார். ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரான செந்தில் முருகன் பெயர் இடம்பெறவில்லை. எனவே ஓபிஎஸ் தரப்பினர் இதற்கு தெரிவித்தனர்.

ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம், “எந்த உணர்வுடன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோ, அந்த உணர்வை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறவே நிராகரித்துள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு, யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற முழு விவரத்தையும் அளிப்பது அவருடைய கடமை. இதை உச்ச நீதிமன்றமும் தனது தீர்ப்பில் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே அதிமுக வேட்பாளராக செந்தில் முருகன் தேர்தல் அதிகாரி முன்பு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் தமிழ் மகன் உசேன் அளித்த பட்டியலில் செந்தில் முருகன் பெயர் இடம் பெறவில்லை என்பதோடு, வேட்பு மனு தாக்கல் செய்யாத தென்னரசு பெயர் மட்டும் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் என அறிவித்திருக்கிறார். அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும்.

அதைத்தவிர்த்து முன் கூட்டியே ஒருவரை அதிகாரப்பூர்வ வேட்பாளர் என தமிழ் மகன் உசேன் அறிவிக்கிறார் என்றால் அவர் முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்பது தெரிகிறது. அது நடுநிலை தவறிய காரியம் மட்டுமல்ல, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அறவே மீறுவதாகும்.” என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவர்களைத் தவிர மீதமுள்ளவர்களின் கடிதங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க இன்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லிக்கு விமானத்தில் கிளம்பினார்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், இன்பதுரை ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வழங்கிய கடிதங்களை சமர்ப்பிக்கின்றனர்.

ஓபிஎஸ் தரப்பு கடிதங்கள் இல்லாத நிலையில் அதை தேர்தல் ஆணையம் ஏற்குமா, வேட்பாளர் பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் பெயரை அந்த படிவத்தில் குறிப்பிடப்படாததற்கு என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.