டெல்லி மேயர் தேர்தல் 3வது முறை ஒத்திவைப்பு.. உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம் -ஆம் ஆத்மி ஆவேசம்

டெல்லி மேயர் தேர்தல் மீண்டும் ரத்து: மேயரை தேர்வு செய்யாமல் டெல்லி மாநகராட்சி மாமன்றம் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வதாக ஆம் ஆத்மி கட்சி (Aam Aadmi Party) தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி மற்றும் பாஜக உறுப்பினர்களுக்கு இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டதால் 3-வது முறையாக மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேசிய தலைநகரில் உள்ள முனிசிபல் ஹவுஸ் மூன்றாவது முறையாக ஒரு மேயரை தேர்ந்தெடுக்கத் தவறியது. டெல்லி  மாநகராட்சி மேயரை பதவிக்கான தேர்தலில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில் இருகட்சிகளுக்கும் இடையே குழப்பம் வெடித்தது. 

உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம் -ஆம் ஆத்மி ஆவேசம்

ஆம் ஆத்மி தலைவர் அதிஷி (AAP leader Atishi) செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம். இன்றே செல்வோம். டெல்லி மேயர் தேர்தலை நீதிமன்ற கண்காணிப்பில் நடத்துவதற்கு கோரிக்கை வைப்போம்” என்று கூறியதாக செய்தி நிறுவனமான பிடிஐ மேற்கோளிட்டுள்ளது. “அடுத்த இரண்டு வாரங்களில் மேயர் தேர்தலை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நடத்த வேண்டும் என்பதும், தகுதி இல்லாதவர்கள் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்பதும் எங்களது கோரிக்கையாக இருக்கும். மேலும் மாநகராட்சி மாமன்றத்தின் நடவடிக்கைகளை சீர்குலைக்க பாரதிய ஜனதா கட்சி (BJP) திட்டமிட்டுள்ளதாகவும், அதன்மூலம் அவையை ஒத்திவைக்க அவர்கள் முயற்சி செய்வதாகவும் கூறினார்.

ராஜ்யசபா எம்.பி.யும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவருமான சஞ்சய் சிங் (AAP Leader Sanjay Singh) கூறுகையில், ‘மேயர் தேர்தலை நடத்த, நாங்கள் இப்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம். பாஜக ஜனநாயகம் மற்றும் அரசியலமைபின் கழுத்தை நெரிக்கிறது. மேயர் தேர்தலில் வாக்களிக்க தலைமை அதிகாரி அனுமதித்தார். இது அரசியலமைப்பின் படி தவறானது மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது” என்று அவர் கூறினார்.

முன்னதாக, டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா (Delhi Deputy CM Manish Sisodia) கூறுகையில், பாரதிய ஜனதா கட்சி (Bharatiya Janata Party) தனது கவுன்சிலர்களிடம் மாநகராட்சி அவை நடவடிக்கைகளை சீர்குலைக்கும்படி உத்தரவிட்டதாகவும், அதன்மூலம் தேர்தலை நடத்த விடக்கூடாது என பாஜக திட்டம் போட்டுள்ளதாகவும் என குற்றம் சாட்டினார்.

டெல்லி மாநகராட்சி மாமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

டெல்லியில் உள்ள முனிசிபல் ஹவுஸ் அடுத்த தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்று தலைமை அதிகாரி சத்யா சர்மா கூறியதாக செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளார்.

டெல்லி மாநகராட்சி மாமன்றம் சபை காலை 11:30 மணியளவில் கூடிய பிறகு, மேயர், துணை மேயர் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெறும் என்று சர்மா அறிவித்தார். முதியவர்களும் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே ஆம் ஆத்மி கட்சியின் மூத்த கவுன்சிலர் முகேஷ் கோயல் ஆல்டர்மென்கள் வாக்களிக்க முடியாது எனக்கூறி எனக்கூறி ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் சபையில் முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக கவுன்சிலர்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால், ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் மாமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, ஜனவரி 6 ஆம் தேதி மற்றும் 24 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களிலும் டெல்லி மாநகராட்சி மாமன்றம் கூடியது. இதேபோல் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கூச்சல், குழப்பங்களில் ஈடுபட்டதால் இரண்டு முறையையும் புதிய மேயரைத் தேர்வு செய்யாமல் மாமன்றத் தலைவர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி அதிக இடங்களில் வெற்றி

டெல்லி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இதில், டெல்லியில் ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. டெல்லியுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சியும், 104 வார்டுகளில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் இன்னும் மேயர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.