அதானியை பிரதமர் காப்பாற்றுகிறார்; ராகுல் காந்தி சாடல்.!

நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், பாஜக அரசின் கடைசி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இந்தநிலையில் அதானி முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும் தொடர்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்ததை அடுத்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முறையான விசாரணை வேண்டும் என கூறி வருகின்றனர். இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல், ‘‘மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு.? இந்த கேள்விக்கான பதிலை மக்கள் அறிய விரும்புகின்றனர். என்னுடைய பாரத் ஜோடோ யாத்திரை தமிழகத்தில் தொடரப்பட்டு, கேரளா வழியாக காஷ்மீர் வரை சென்றேன். இந்த யாத்திரை முழுவதும் மக்கள் தொடர்ந்து உச்சரித்த வார்த்தை அதானி, அதானி தான்.

இளைஞர்கள் தொடர்ந்து என்னிடம் ஒரு கேள்வி கேட்டு வந்தனர். அது என்னவெனில், அதானியின் சொத்து மதிப்பு ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதீத வளர்ச்சி அடைந்தது எப்படி? குறிப்பாக 2014 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆண்டுக்குள் 8 பில்லியன் டாலரில் இருந்து 140 பில்லியன் டாலராக அதிகரித்தது என கேட்டனர்.

அதானி கால் வைக்கும் தொழில் அனைத்திலும் அவர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவது எப்படி என மக்கள் என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர். மோடிக்கும் அதானிக்குமான உறவு என்பது நீண்ட நாட்களுக்கு முன்பு மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போதில் இருந்தே உருவானது. இருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

அக்னீவீர் திட்டம் என்பது ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு நமது இந்திய ராணுவத்தின் மீது திணிக்கும் ஒரு தேவையற்ற செயல் என மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர்’’ என அவர் தெரிவித்தார். அதையடுத்து நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல் காந்தி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘பிரதமர் பலமுறை அதிர்ச்சியடைந்தார். என்னுடைய எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. மேலும், நான் எந்த சிக்கலான கேள்விகளையும் கேட்கவில்லை. கௌதம் அதானி பிரதமருடன் எத்தனை முறை வெளிநாட்டு பயணங்களுக்கு சென்றார், எத்தனை முறை பிரதமரை சந்தித்தார் என்று மட்டுமே கேட்டேன். ஆனால் நாடாளுமன்றத்தில் பிரதமர் இதற்கு பதிலளிக்கவில்லை.

பிரதமரின் உரையில் எனக்கு திருப்தி இல்லை ஆனால் அது உண்மையை வெளிப்படுத்துகிறது. அதானியின் முறைகேடுகள் குறித்து விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் நண்பர்களாக இல்லாவிட்டால், விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் ஒருமுறை கூறியிருக்க வேண்டும். பாதுகாப்புத் துறையில் பினாமி கணக்குகள் மற்றும் ஷெல் நிறுவனங்கள் மூலம் புழக்கத்தில் உள்ள பணம் குறித்து பிரதமர் பேசவில்லை.

ஆன்லைன் சூதாட்டம்.. மத்திய அரசு கடுமையான சட்டத்தை இயற்றும் – மத்திய அமைச்சர்

பிரதமர் அதானியை பாதுகாக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. இது தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு தொடர்பான பிரச்சினையாகும். விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் ஏன் செய்யவில்லை என்பது எனக்குப் புரிகிறது’’ என ராகுல் காந்தி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.