திரைப்பட விமர்சனத்தில், யூ-ட்யூப் விமர்சனம் தற்போது அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ரசனை உள்ள ரசிகர்களுக்கும் தங்களுக்கான ஆஸ்தான யூ-ட்யூப் விமர்சகர்களை வைத்துள்ளனர். இதனால், யூ-ட்யூப் விமர்சனம் என்பது பெரிய வியாபாரமாக உயர்ந்துவிட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அந்த வகையில், கோலிவுட் மட்டுமின்றி பல்வேது சினிமா வட்டாரங்களிலும் யூ-ட்யூப் விமர்சனங்கள் மீது பல்வேது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதனை கட்டுப்படுத்தவும், சினிமா வியாபாரத்தை பாதிக்காத வகையிலும் விதிமுறைகள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் பல நாள்களாக எழுந்துள்ளன.
தமிழ்நாட்டிலும், படங்கள் வெளியாகி மூன்று நாள்களுக்கு பின்னரே யூ-ட்யூப் விமர்சனங்களை அனுமதிக்க வேண்டும் என தமிழ்த் திரைப்டத் தயாரிப்பாளர் சங்கம் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டுவந்தது. மேலும், திரையரங்கினுள் யூ-ட்யூப் விமர்சனங்களை படம் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியிருந்தது. அந்த அளவிற்கு,யூ-ட்யூப் விமர்சகர்களின் அத்துமீறல் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில்,கேரளாவில் நாளை (பிப். 9) முதல் திரையரங்குகளில் யூ-ட்யூப் விமர்சனங்களை எடுக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, திரையரங்க வளாகத்தில் திரைப்பட விமர்சனம் எடுக்க யூ-ட்யூப் விமர்சகர்களுக்கு பிப்.9ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக kerala exhibitors association என்ற கேரள திரையரங்கங்கள் சங்கத்தின் தலைவர் விஜய்குமார் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து, திரையரங்கில் படம் வெளியாகி 42 நாள்களுக்கு பின்தான் ஓடிடி வெளியீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த அறிவிப்பை அடுத்து அண்டை மாநிலங்களான கோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் வட்டாரமும் இதுபோன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.