குழந்தையின் எதிர்காலத்தில் தந்தையின் பங்கு மிகப்பெரியது – சென்னை உயர்நீதிமன்றம்

விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சம் கோரி முறையாக விண்ணப்பிக்கவில்லை என்றாலும், குழந்தைகளின் பராமரிப்புக்கு தந்தை பணம் வழங்கக்கூறி உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நெல்லை குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவாகரத்து வழக்கை சென்னைக்கு மாற்றக்கோரி, பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், வழக்கை சென்னைக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் தற்போது வேலையின்றி இருப்பதால், அவரின் பராமரிப்பில் உள்ள 15 வயது ஆண் மற்றும் 9 வயது பெண் குழந்தைகளின் வாழ்வாதாரம், கல்வி உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் வகையில் கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

விவாகரத்து

மனுதாரர் ஜீவனாம்சம் கோரவில்லை என்றாலும் கூட அவரது சூழலை கருத்தில் கொண்டு, கணவர் பராமரிப்பு தொகை வழங்குவதற்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாகக் கூறிய நீதிபதி, மனைவி வேலையில் இருந்தாலும் கூட குழந்தைகளின் பரமாரிப்பில் கணவருக்கே முக்கியத்துவம் இருப்பதாகவும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

ஜீவனாம்சத்துக்கான கோரிக்கையை முன் வைக்கவில்லை என்றாலும் குழந்தைகளின் எதிர்காலத்தில் தந்தையின் பங்கும் பொறுப்புணர்வும் அதிகம் இருப்பதால், அதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டே இத்தீர்ப்பினை வழங்கி இருக்கிறது. தம்பதியர் இணைந்து வாழ்வதும், பிரிந்து செல்வதும் அவரவர் தனிப்பட்ட உரிமை என்றாலும் அவர்களால் வந்த குழந்தைகளின் நலன் மீது நமது அரசமைப்பு பெரும் அக்கறை செலுத்துகிறது என்பதற்கு இத்தீர்ப்பும் ஓர் உதாரணம்.

இது குறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் கேட்டபோது…

“தம்பதிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களோ அந்த மத திருமண சட்டப்படி நிலுவையில் உள்ள வழக்குகளில் ஜீவனாம்சம் மற்றும் வழக்கிற்கான செலவுத்தொகை வழங்க உத்தரவிடப்படும். உதாரணத்திற்கு இந்து திருமண சட்டப்படி விவாகரத்து வழக்குப் பதிவு செய்தால், மனைவிக்கு, கணவர் அந்த வழக்கு நடைபெறும் காலங்களில், வழக்கு நடத்துவதற்கான செலவு மற்றும் ஜீவனாம்சம் என இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த இடைக்கால நிவாரணத்தொகை என்பது மனைவிக்கு மட்டுமல்ல, குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட செலவுகளுக்கும் பொருந்தும்.

சுதா ராமலிங்கம்

மனைவி ஏதேனும் பணியில் இருந்தாலும் கூட, அவரது வருவாய் மட்டுமே போதாது என்பதால், கணவர் பணம் தர வேண்டும் என்பது ஏற்கெனவே சட்டத்தில் இருக்கும் அம்சம்தான். மனைவி ஜீவனாம்சம் கேட்கவில்லை என்றாலும் கூட ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்கிற நீதிபதியின் கருத்தை எப்படி நடைமுறைப் படுத்த முடியும் என்பது கேள்விக்குறியான ஒன்று. வழக்குப்பதிவு செய்யப்பட்டால், அந்த வழக்கை கால தாமதம் இல்லாமல் முடித்து, ஜீவனாம்சம் உள்ளிட்டவற்றை பெற்றுத்தந்தாலே போதும்” என்கிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.