திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகில் வசிப்பவர் மோகன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் மனைவி பெயர் மீனா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இந்தத் தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டுக்கு மேலாகும் நிலையில், மீனா கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், மீனாவுக்குப் பிரசவவலி ஏற்பட்டதாக, நேற்று மாலை வேலப்பன்சாவடி பகுதியிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பின்னர் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக, ஒரு குழந்தையின் புகைப்படத்தைக் கணவர் உட்பட உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறார் மீனா. அதோடு, “பிறந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் பிரச்னை இருப்பதால், மருத்துவர்கள் குழந்தையை இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என்று கூறி, என்னிடமிருந்து எடுத்து சென்றனர். ஆனால், இப்போது எனக்கு குழந்தையே பிறக்கவில்லை என்று சொல்லி ஏமாற்றுகின்றனர்” என்றிருக்கிறார். அதையடுத்து, அவரின் உறவினர்கள் பெருமளவில் மருத்துவமனையில் குவிந்து, அங்கு மருத்துவர்கள், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
பிரச்னை பெரிதாகவே இந்தச் சம்பவம் குறித்து திருவேற்காடு பகுதி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீஸார், மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். அதில், மீனா இதுநாள் வரை அந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்ததாக எந்த தகவலும் இல்லை என்பது தெரியவந்தது.

அதேபோல, அன்றைய தினம் அவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டதற்கான எந்த தகவலும் மருத்துவமனையில் இல்லை. மேலும், மீனாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமானதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று கூறியிருக்கின்றனர். இதனையடுத்து, போலீஸார் மீனாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
திருமணமாகி ஓராண்டாகும் நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாகக் கணவர் வீட்டாரிடம் தெரிவித்திருக்கிறார் மீனா. இதனையடுத்து, அவருக்கு வளைகாப்பு முடிந்து பிரசவத்துக்காக அவரின் அம்மா வீட்டுக்கும் அனுப்பிவைத்திருக்கிறார்கள் கணவர் வீட்டினர். சம்பவ தினத்தன்று, மீனா தன்னுடைய தாயுடன் அந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்று, `நான் கர்ப்பமாக இருக்கிறேன். தற்போது எனக்கு வயிற்று வலி அதிகமாக இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். பின்னர், அங்கிருந்து வெளியே வந்தவர், தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக ஒரு குழந்தையின் புகைப்படத்தைக் கணவருக்கு அனுப்பியிருக்கிறார். அதற்கு பின்னர்தான், தன்னுடைய குழந்தையை மருத்துவமனையினர் எடுத்துக்கொண்டனர் என்று சொல்லி பிரச்னை செய்திருக்கிறார்.
தன்னுடைய கணவர் வீட்டாரை ஏமாற்ற, கர்ப்பம் ஆகாமலேயே குழந்தை பிறந்ததாகச் சொல்லி நாடகம் ஆடியது போலீஸ் விசாரணையில் வெளிச்சமானது. இந்த உண்மை தெரிந்ததுமே, மீனாவின் உறவினர்கள் அனைவரும் மருத்துவமனையிலிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். மேலும், நாடகமாடிய அந்தப் பெண்ணையும், அவரின் தாயாரையும் போலீஸார் கடுமையாக எச்சரித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவத்தால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.