கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நன்னவரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பாலமுருகன். இவருடைய மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். மேலும் இதுகுறித்து விசாரணையில், அதே பகுதியில் உள்ள செங்கல் சூலையில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த நடையன் (21) என்பவர் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்று செங்கல் சூலையில் தங்க வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, போலீசார் மாணவியை மீட்டு விழுப்புரம் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியை கடத்திச் சென்ற நடையனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.