சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவது குறித்து, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துகள் அரசியல் அரங்கில் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் பங்கு இருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டையும், நீதித்துறையையும், கொலீஜியத்தையும் அவமதித்துவிட்டதாகக் கூறி, இவர்கள் இருவர்மீதும் மும்பை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் மும்பை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வழக்கறிஞர் ஏக்நாத் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவில், `குடியரசு துணைத் தலைவர், சட்ட அமைச்சரை பதவிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்.

இருவரும் தாங்கள் எடுத்த பதவிப் பிரமாணத்தை மீறும் வகையில் கருத்து தெரிவித்திருக்கின்றனர். எனவே, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் அகமத் பேசுகையில், “இருவரும் தெரிவித்திருக்கும் கருத்துகள் அரசியல் சாசனத்தை இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல், பொதுமக்களையும் பெரிதும் பாதிக்கும். அதோடு அராஜகத்துக்கும் வழிவகுக்கும். இருவரும் சுப்ரீம் கோர்ட்டின் மதிப்பை பொது இடத்தில் குறைக்கும்விதத்தில் நடந்து கொண்டிருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அனில் சிங், “விளம்பரத்துக்காக, எந்தவித சட்டபூர்வ முகாந்திரமும் இல்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். நீதிபதி கங்காபூர்வாலா தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மனுவை விசாரிக்க முடியாது” என்று கூறி தள்ளுபடி செய்தனர். காரணம் தனியாகத் தெரிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.