உலக பாதுகாப்பு உணவு தினம், ஒவ்வொரு ஆண்டும் இன்று (பிப்ரவரி 9) கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு மரபணு அற்ற இந்தியாவிற்கான கூட்டமைப்பு, சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் மரபணு மாற்றமில்லா விதைகள் மற்றும் உணவுப் பொருள் கண்காட்சியை நடத்தியது.
கண்காட்சியில் மரபணு மாற்றம் இல்லா பாரம்பரிய விதை அங்காடிகள், மரபணு மாற்றமில்லா இயற்கை வழி உணவு அங்காடி, மரபணு மாற்றமில்லா பாரம்பரிய பருத்தி அங்காடி, விடை பரிமாற்ற அங்காடி உள்ளிட்ட இயற்கை சார் அங்காடிகள் பல இடம்பெற்றிருந்தன. மரபணு மாற்றம் இல்லா இயற்கை விதைகள் மற்றும் உணவுப் பொருள்களை காண சென்னை மற்றும் சென்னையில் புறநகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.
“இந்த கண்காட்சி மூலம், மரபணு மாற்றம் இல்லா விதைகள் குறித்து தெரிந்து கொண்டோம். நம் நாட்டு விதை ரகங்கள் குறித்து இக்கண்காட்சியின் வாயிலாக அறிந்து கொண்டோம். மரபணு மாற்றம் இல்லா விதைகளை கொண்டு இயற்கை உணவுகளை உண்ணுவதே உடலுக்கு ஆரோக்கியம்” என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சிலர் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த மரபணு மாற்றம் இல்லா பாரம்பரிய விதை அங்காடிகளில் பாரம்பரிய விதைகளை வாங்கிச் சென்றனர். கண்காட்சியில் கலந்துகொண்ட மகேஷ்வரி என்பவர் இதுகுறித்து நம்மிடையே பேசுகையில், “இது போன்ற பாரம்பரிய விதைகளை கொண்டு மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் வீடுகளில் ஒரு இயற்கை சூழலை உருவாக்க முடியும். நம் வீட்டில் இயற்கையாக விளைவித்த காய்கறிகளில் சமைத்து சாப்பிடும் போது மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிறது” என்றார்.
இவரைப்போலவே அனந்து சிவராமன் என்பவர் நம்மிடம் பேசுகையில், “மரபணு மாற்றப்பட்ட விதைகள் கேடு விளைவிக்கும் என்பதை உலகம் முழுவதும் இருக்கும் பல அறிவியலாளர்கள் நிரூபித்துள்ளனர். அதேநேரம், அவை நன்மை அளிக்கும் என்பதற்கான ஒரு ஆதாரமும் இல்லை. மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு வந்தால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்; சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்; பல வியாதிகள் உருவாகும். பிறகு அதனை மீட்டெடுக்க முடியாத அளவு பாதாளத்தில் விழுந்து விடும். தமிழ்நாடு அரசிடம் நாங்கள் கோரிக்கையாக வைப்பது, மரபணு மாற்றப்பட்ட விதைகள் வேண்டாம் என்பதே. அந்த விதைகளுக்கு பதிலாக, நம்மிடம் நிறைய மாற்று வழிகள் உள்ளன” என்றார்.
நளினி என்ற பயனர் கூறுகையில், “இயற்கை காய்கறிகளுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. அனைவரும் நிறைய கேள்வி கேட்டு சந்தேகங்களை தீர்த்து கொள்வார்கள். மக்களுக்கு இது மிகவும் பிடித்துள்ளது. இயற்க்கை காய்கறிகள் ஒரு வாரம் வைத்து சுருங்கி போனாலும் சமைக்கும் போது, சுவையாக இருக்கும். தக்காளி விதைகளில் வித்யாசம் தெரியும். ஒவ்வொரு முறையும் விவசாயிகளிடம் சென்று சரிபார்த்து தான் வாங்குகிறோம். நாம் வசிக்கும் ஊரில் உள்ள விவசாயிகளிடம் இருந்து வாங்கி சாப்பிடும் உணவு சத்தானது” என்றார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்தா சீலா நாயர் பேசுகையில், “மக்களுக்கு விதைகளை பற்றின போதுமான தகவல்கள் கிடைப்பது இல்லை. அவற்றின் நன்மைகள் தீமைகள் என்ன என்பதில் அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை. எந்த உணவு பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்று கூறவேண்டும். பின்னர் மக்கள் எத்தனை வாங்க வேண்டும் என்று தீர்வு செய்வர். அது அவர்களின் உரிமை.
உணவுப்பொருள்களில் கலப்படம் ஏற்படாமல் தடுக்கவேண்டியது நம்மை ஆளும் அரசின் கடமை. அது சாத்தியம் இல்லாத சூழலில், மாடித் தோட்டங்கள் மூலமாக நமக்குத் தேவையானவற்றை நாமே பயிரிட்டுக்கொள்வதும் நம்மால் முடியும். அதுவும் முடியவில்லையா..? விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று நமக்குத் தேவையான பொருள்களை வாங்கிப் பயன்படுத்தலாம். அதுதான் நம் ஆரோக்கியம் காக்கும்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM