பெயருக்கு பின்னால் நேரு பெயரை சேர்க்க பயப்படுவது ஏன்? ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி சரமாரி கேள்வி; எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் ஆவேசம்; அதானி கேள்விக்கு பதில் அளிக்க மீண்டும் மறுப்பு

புதுடெல்லி: பெயருக்கு பின்னால் நேரு பெயரை சேர்க்க பயப்படுவது ஏன் என்று ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி நேரடியாக கேள்வி எழுப்பினார். ஆனால் அதானி பற்றி எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு மீண்டும் அவர் பதில் அளிக்கவில்லை. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கு மோசடி தொடர்பாக அதானி மற்றும் மோடி நட்பு குறித்து பேசினார். இதற்கு நேற்று முன்தினம் மக்களவையில் பதில் அளித்து பிரதமர் மோடி பேசினார்.

நேற்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ஆளும்கட்சி எம்பிக்கள் மோடி, மோடி என்று கோஷம் எழுப்பினர். பதிலுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் மோடியும், அதானியும் நண்பர்கள்(மோடி, அதானி பாய், பாய்) என்று கோஷம் எழுப்பினர். அவையின் நடுவே அவர்கள் வந்து அமளியில் ஈடுபட்டனர். ஆனால் பிரதமர் மோடி நேற்றும் அதானி விவகாரம் குறித்து விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே பிரதமர் மோடி 90 நிமிடம் பேசியதாவது; நான் நாட்டிற்காக வாழ்கிறேன். நாட்டுக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன்( அப்போது பிரதமர் மார்தட்டிக் கொண்டே பேசினார்). ஆனால் எதிர்க்கட்சிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அரசியல் நாடகம் ஆடுகின்றனர். ஒரு நபர் எப்படி எல்லோரையும் விட பெரிதாகி நிற்கிறார் என்பதை நாடு கவனித்து வருகிறது.( அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து ‘‘மோடி-அதானி நண்பர்கள்’’என்று கூச்சலிட்டனர். அப்போது மோடி அவர்களை நோக்கி, ‘இந்த கோஷம் எழுப்புவதற்கு கூட அவர்கள் இந்த அவைக்கு மீண்டும் வர வேண்டும்’ என்றார்).

நான் நாட்டிற்காக வாழ்கிறேன், தேசத்திற்கு சேவை செய்வேன் என்று உறுதியுடன் தொடங்கினேன். ஆனால் என்னுடன் வருவதற்கு தைரியம் இல்லாததால் அவர்கள் இப்படி விளையாடுகிறார்கள். எதிர்க்கட்சிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இப்படிச் செயல்படுகின்றன. முதல் பிரதமர் மிகவும் பெரியவராக இருந்தால், அவரது குடும்பப்பெயரை அவரது வாரிசு ஏன் பயன்படுத்தவில்லை. அவரது பெயரை குடும்ப பெயராக பயன்படுத்த பயப்படுவது ஏன்? நீங்கள் எவ்வளவு சேற்றை வீசுகிறீர்களோ, அவ்வளவு பெரிய தாமரை(பா.ஜவின் சின்னம்) பூக்கும். ஏனெனில் நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் காங்கிரஸ் பெயரளவுக்கான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டது.

அவர்களது அரசியலைப் பற்றி மட்டுமே அவர்கள் கவலைப்பட்டனர். ஏன் நாட்டில் உள்ள 600 திட்டங்களுக்கு நேரு, காந்தி குடும்பத்தின் பெயர்கள் தான் உள்ளன. காங்கிரஸ் கட்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு எதிரானது. நமது நாட்டில் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கிய இந்திய விஞ்ஞானிகளை அது அவதூறு செய்தது. நமது விஞ்ஞானிகளை இழிவுபடுத்துவதற்கான எந்த வாய்ப்பையும் அவர்கள் விட்டுவிடவில்லை. கடந்த காலத்தில் ஏராளமான பாவங்களை செய்த காங்கிரஸ் தற்போது நாட்டை தவறாக வழிநடத்த முயற்சி செய்கிறது.

இந்த நாடு யாருடைய தேசமும் அல்ல. அரசியல் ஆதாயங்களுக்காக சில மாநில கட்சிகள் தவறாக நடந்து கொள்கின்றன. இலவசங்கள், பழைய பென்சன் திட்டம் போன்ற பெரிய நிதிசுமையை ஏற்படுத்தும் திட்டங்களை தேர்தலுக்காக அறிவிக்கின்றன. இது போன்ற நிதி, சுகாதாரம், பொருளாதாரக் கொள்கைகளுடன் விளையாடக் கூடாது. இதனால் அண்டை நாடுகள் திவாலாகி வருகின்றன. அடுத்த சந்ததியினருக்கு பாரத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு பாவத்தையும் செய்யாதீர்கள். தற்போதைய ஆட்சி அனைத்து பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிக்கிறது. ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கே இந்த முயற்சியே தவிர, அரசியல் ஆதாயங்களைப் நாங்கள் பார்க்கவில்லை. சிலரின் நடத்தை மற்றும் மொழி ஆகியவை சபைக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் ஏமாற்றமளிக்கின்றன.

முந்தைய காலத்தைப் போலில்லாமல், பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு நிரந்தரமானத் தீர்வுகளை வழங்கி அவர்களை அதிகாரப்படுத்துவதே எங்கள் அரசின் நோக்கமாகும். மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டியது அரசின் பொறுப்பாக இருந்த நேரத்தில் முந்தைய அரசுகளுக்கு வேறு முன்னுரிமைகளும், நோக்கங்களும் இருந்தன. இன்று நாங்கள் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை கண்டு முன்னேறி வருகிறோம். சிறு விவசாயிகள், இந்திய வேளாண் துறையின் முதுகெலும்பு. இவர்களின் கரங்களை வலுப்படுத்த நாங்கள் பாடுபட்டு வருகிறோம். சிறு விவசாயிகளின் தேவைகளில் கவனம் செலுத்தும்  தற்போதைய அரசு அவர்களுக்கும், சிறு வியாபாரிகள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோருக்கும் பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.  

மகளிருக்கு அதிகாரமளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாமானிய மக்களுக்கு அதிகாரமளிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உலக அளவில் நமது நாடு முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் வெற்றி இன்று ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2047 க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மாபெரும் பாய்ச்சலை மேற்கொள்ளத் தயாராக உள்ளது. இனிமேல் அது பின்னடைவை சந்திக்காது. இவ்வாறு அவர் பேசினார். அதன்பின்னர் குரல் ஓட்டெடுப்பு மூலம் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* எதிர்ப்பு கோஷத்தால் அவை ஒத்திவைப்பு
பிரதமர் மோடி பேசிவிட்டு சென்ற பிறகு காங்கிரஸ் எம்பி சக்திசிங் கோகில் பேசினார். அவரை பேச விடாமல் ஆளும்கட்சி எம்பிக்களும், எதிர்கட்சி எம்பிக்களும் கோஷம் எழுப்பினர். இதனால் அவையை துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

* 90 முறை ஆட்சியை கலைத்த காங்கிரஸ்
பிரதமர் மோடி பேசும் போது,’ அரசியலமைப்பின்  சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி 90 முறை மாநில ஆட்சியை  கலைத்தது யார் தெரியுமா?. அதிலும் ஒருவர் மட்டும் 356 சட்டப்பிரிவை  பயன்படுத்தி 50 முறைகளுக்கு மேல் மாநில ஆட்சியை கலைத்திருக்கிறார். அது இந்திரா காந்தி தான். மாநில ஆட்சியை கலைப்பதில் அரைசதம் அடித்திருப்பவர் இந்திரா காந்தி தான். இப்போது ஏராளமான கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கின்றன. ஆனால் ஒரு காலத்தில் அந்த கட்சிகளின் மாநில அரசுகளை கலைத்தது  காங்கிரஸ் தான்’ என்றார்.

* கார்கேவை விமர்சித்த மோடி
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியை விமர்சித்தார். அவர் பேசும் போது,’நாடாளுமன்றம் நடக்கும் போது கூட, பிரதமர் எனது தொகுதியான குல்பர்காவுக்கு சென்றார். ஒரு முறை அல்ல. இரண்டு முறை அங்கு சென்றார்’ என்று கார்கே கூறினார். இதை கேட்டதும் பிரதமர் உட்பட அனைவரும் சிரித்தனர். இதற்கு பிரதமர் தனது உரையில் பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில்,’ கர்நாடகா மாநிலம் குல்பர்கா தொகுதியில் 50 ஆண்டுகளாக வெற்றி பெற்ற கார்கே 2019ல் தோல்வி அடைந்தார். இது அவரது முதல் தேர்தல் தோல்வி. அவரது வலியை என்னால் புரிந்து கொள்ள முடியும். அவரது தொகுதியில் 8 லட்சத்துக்கும் அதிகமான ஜன்தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பல வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு, மக்கள் அதிகாரம் பெற்றவர்களாகவும், விழிப்புணர்வுடனும் இருக்கும்போது, ஒருவரின் கணக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்படுகிறது. அவரின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.