சென்னை: வருங்காலத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என்று அரசு முதன்மை செயலர் அதுல் ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத் துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்வுக்கு அரசு முதன்மை செயலரும், தொழிலாளர் நல ஆணையருமான அதுல் ஆனந்த் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவிழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமெரிக்க தூதரக அரசியல் பிரிவு தலைமை அலுவலர் விர்சா பெர்கின்ஸ் தொடங்கி வைத்து கையெழுத் திட்டார்.
அதைத்தொடர்ந்து கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் கொத்தடிமை ஒழிப்பு பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட காவல்துறை மற்றும் அமலாக்கத் துறை அலுவலர்களுக்கு கேடயங்கள், பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மேலும் முன்னாள்கொத்தடிமைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அரசு முதன்மைச் செயலர் அதுல் ஆனந்த் பேசும்போது, “கொத்தடிமைத் தொழிலாளரை ஒழிப்பதற்கான பொறுப்பு தொழிலாளர் நலத்துறையிடம் இருந்துதான் தொடங்குகிறது. எங்களது நோக்கமே, கொத்தடிமைத் தொழிலிலிருந்து குழந்தைகளை மீட்பது மட்டுமின்றி, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து, மீண்டும் அவர்கள் கொத்தடிமைக்கு செல்லாமல் தடுப்பதுதான்.
கடந்த 5 ஆண்டுகளில் 1,444 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, அவர்களின் மறுவாழ்வுக்காக ரூ.3 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் அனைவரது ஒத்துழைப்புடன் கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்” என்றார்.
கொத்தடிமைத் தொழிலாளர்கள் குறித்து பெரம்பலூர் எஸ்பிஷ்யாம்லதா தேவி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொத்தடிமைத் தொழிலில் இருக்கும் குழந்தைகளுக்கு தாங்கள் கொத்தடிமையில்தான் இருக்கிறோம் என்பதே தெரியாது. அதற்கான விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லை. இதுபோன்ற சூழ்நிலையை என்ஜிஓ மட்டுமின்றி யார் வேண்டுமென்றாலும் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். சில சமயங்களில் தாய் தந்தையரே, தங்களது குழந்தைகளை கொத்தடிமை தொழிலில் ஈடுபடுத்துகின்றனர்.
அதேபோல் தெருவோர குழந்தைகள், ரயிலில் வரும் வடமாநிலகுழந்தைகள், சினிமா நட்சத்திரங்களை பார்க்கும் ஆவலில் கிராமத்தில் இருந்து வரும் குழந்தைகள் போன்ற குழந்தைகள்தான் இதுபோன்ற கொத்தடிமை தொழிலுக்கு இலக்காக அமைக்கின்றன.
563 குழந்தைகள் மீட்பு: இக்குழந்தைகள் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். இவர்கள் மீட்கப்பட்டுகுழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு வரை சென்னையில் 563 தெருவோர குழந்தைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில சட்ட சேவைகள் ஆணையம் சார்பு நீதிபதிகள் ஜெய, தமிழ்செல்வி, தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் ஹேமலதா, மகளிர் மற்றும் குழந்தைகள் பிரிவு எஸ்பி ஜெய் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற் றனர்.