தலைமை செயலர் கார் முன் திடீர் தர்ணா-அரசு ஊழியர்கள் போராட்டத்தால் பரபரப்பு

புதுச்சேரி :  காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வலியுறுத்தி புதுச்சேரி தலைமை செயலரின் காரை முற்றுகையிட்டு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள எழுத்தர் மற்றும் இளநிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப நாடு முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் இளநிலை எழுத்தர், அரசு உதவியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பதவி உயர்வு மூலம் மட்டுமே காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும்.

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களை புதிதாக வேலைக்கு  தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே புதுச்சேரி தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பிற துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலக வாசலில் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் திடீரென தலைமை செயலரின் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன்காரணமாக மதியம் உணவருந்த தலைமை செயலர் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் தலைமை செயலர் ராஜீவ் வர்மா தனது காரில் புறப்பட்டு சென்றார். ஊழியர்கள் போராட்டத்தால் தலைமை செயலகத்தில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.