வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் அசோக் கெலாட் தாக்கல் செய்தார். அப்போது துவக்கத்தில் பழைய பட்ஜெட் உரையை வாசித்தார். இதனையடுத்து சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தானில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தற்போதைய அரசின் கடைசி பட்ஜெட்டை, முதல்வர் பதவி வகிக்கும் முதல்வர் அசோக் கெலாட் தாக்கல் செய்து உரையாற்றினார். சுமார் 8 நிமிடங்கள் உரையாற்றி இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டதும் எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த அறிவிப்புகள் ஆகும். கடந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டை அசோக் கெலாட் தற்போது வாசித்தார். அதனை அருகில் இருந்த அமைச்சர், அசோக் கெலாட்டிடம் எடுத்து கூறவே, அவர் பட்ஜெட் உரையை நிறுத்தினார்.
இதனையடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. எம்.எல்.ஏ.,க்கள் அமைதி காக்குமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார். ஆனால், இதனை ஏற்காத எம்.எல்.ஏ.,க்கள் அவையில் மையப்பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், சட்டசபை 30 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு அவை கூடியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த தவறு தொடர்பாக அசோக் கெலாட் கூறுகையில், எனது கையில் உள்ள பட்ஜெட் ஆவணங்களில் இருந்த தகவலுக்கும், உங்கள் கைகளில் இருந்த பட்ஜெட் ஆவணங்களில் இருந்த தகவலுக்கும் வித்தியாசம் இருந்தால், அதனை என்னிடம் எடுத்து கூறலாம். ஆனால், தவறுதலாக என்னிடம் உள்ள ஆவணத்தில் ஒரு பக்கம் சேர்க்கப்பட்டிருந்தால், எப்படி பட்ஜெட் கசிந்தது என கூற முடியும். சட்டசபையில் நடந்த நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா கூறுகையில், 8 நிமிடங்கள், பழைய பட்ஜெட் உரையை முதல்வர் வாசித்துள்ளார். வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறையாகும். நானும் முதல்வராக இருந்துள்ளேன். 2 அல்லது 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளேன்.
அப்போது, எனது கைகளில் இருந்த ஆவணங்களை சரிபார்த்துள்ளேன் . முதல்வர், சரிபார்க்காமல் பழைய பட்ஜெட்டை சட்டசபைக்கு கொண்டு வந்து தாக்கல் செய்ததுடன், அதனை வாசித்துள்ளார். இதன் மூலம், அவரது கைகளில் மாநிலம் எப்படி பாதுகாப்பாக எப்படி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement