பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-இலங்கை மோதல்

கேப்டவுன்,

10 அணிகள் பங்கேற்கும் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது. தொடக்க லீக்கில் தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

பெண்களுக்கான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2009-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதன்படி 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடக்க இருந்த இந்த போட்டி உலகக் கோப்பை கால்பந்து போட்டி காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடக்கிறது. மொத்தம் 23 ஆட்டங்கள் கேப்டவுன், பார்ல், ெகபேஹா ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது.

இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் சன் லூஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியுடன் மோதுகிறது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்திய அணி தனது முதலாவது லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கிறது.

இந்திய பெண்கள் அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. கடந்த முறை (2020-ம் ஆண்டு) ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 85 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டு சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

சமீபத்தில் முதலாவது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் இந்திய இளம் படை மகுடம் சூடி வரலாறு படைத்தது. அதேபோன்று சீனியர் போட்டியிலும் சாதிக்கும் உத்வேகத்துடன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது.

அதே நேரத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும் சவால் அளிக்கக்கூடியது என்பதில் சந்தேகமில்லை.

உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.8¼ கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.4¼ கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.