யாரையும் புண்படுத்தவோ, சீண்டவோ கூடாது: ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு நீதிமன்றம் அனுமதி

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச் சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சுற்றுச் சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும் படி உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகளை, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு விசாரித்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ். தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏற்கனவே அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மாற்றியமைத்து, சுற்றுச் சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த உத்தரவிட்டது தவறு என்பதால், இந்த மேல் முறையீட்டு வழக்கு, விசாரணைக்கு உகந்தது தான் என வாதிடப்பட்டது.
image
பி.எப்.ஐ அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை காரணம் காட்டி, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என எந்த ஆதாரங்களும் இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதே காலகட்டத்தில் பிற அமைப்புகள் 500 இடங்களில் போராட்டம் நடத்த அனுமதியளித்தது பாரபட்சமானது என்றும் வாதிடப்பட்டது. ஒருபுறம் அமைதி பூங்கா எனக் கூறிவிட்டு, இன்னொரு புறம் சட்டம் ஒழுங்கு பிரச்னை என அனுமதி மறுப்பதாகவும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை தரப்பில், சுற்றுச் சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும் படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அணிவகுப்பு நடத்தப்படமாட்டாது என ஆர்.எஸ்.எஸ். அறிவித்த நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டது. சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை தான் எனவும், அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அடங்கும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
image
500 இடங்களில் போராட்டங்களுக்கு தான் அனுமதியளிக்கப்பட்டதே தவிர, அணிவகுப்புக்கு அல்ல எனவும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தொடர்ந்தும், பி.எப்.ஐ. தடைக்கு பின்னும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் பாதுகாப்புக்காக 50 ஆயிரம் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே அரசு முயற்சித்ததாகவும், உளவுத்துறை அறிக்கை அடிப்படையில் காவல் துறையினர் செயல்பட்டதாகவும் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
எல்லா மத நம்பிக்கையையும் பாதுகாத்து, தமிழ்நாடு அமைதி பூங்காவாக நீடிக்கவே அரசு விரும்புவதாகவும், அணிவகுப்புக்கு அனுமதி கோரி முறையாக விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆர்.எஸ்.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.
இந்த வழக்குகளில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், உள்ளரங்கு கூட்டமாக நடத்த வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட்டனர். அவர்கள் பிறப்பித்துள்ள உத்தரவில் கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். அதேபோல கடுமையான ஒழுங்குடன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணிகளை நடத்த வேண்டுமென்றும், யாரையும் புண்படுத்தும் வகையிலோ, சீண்டும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
அணிவகுப்பு ஊர்வலம் நடத்த மூன்று தேதிகளை தேர்வு செய்து காவல்துறையிடம் ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அவற்றில் ஒரு தேதியை காவல்துறை தேர்வு செய்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.