அதானி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதில், “இந்திய நிறுவனமான அதானி குழுமம், மோசமான பங்கு கையாளுதல், கணக்கு மோசடி ஆகியவற்றின் மூலமாக மோசடி செய்திருப்பதற்கான ஆதாரங்களை முன்வைத்து, எங்களின் இரண்டு வருட விசாரணையின் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துகிறோம். அதானி குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான கௌதம் அதானி, கடந்த மூன்று ஆண்டுகளில் $100 பில்லியனுக்கும் அதிகமான நிகர மதிப்பைச் சேர்த்திருக்கிறார்.

அதானி குழுமத்தின் முன்னாள் மூத்த நிர்வாகிகள் உட்பட டஜன் கணக்கான நபர்களுடன் பேசியும், ஆயிரக்கணக்கான ஆவணங்களை மதிப்பாய்வு செய்தும், கிட்டத்தட்ட அரை டஜன் நாடுகளுக்கு நேரடியாகச் சென்றும் எங்கள் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு அதானி நிறுவனம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. மறுபுறம் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பாஜக-வுக்கும், பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால் நாடாளுமன்றமும் தொடர்ந்து முடங்கியது. இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “அதானி குழுமத்தின் அனைத்து சொத்துக்களையும் பிரதமர் நரேந்திர மோடி தேசிய மயமாக வேண்டும்.

அதன் பிறகு அந்த சொத்துக்களை ஏலம் விட்டு அந்த பணத்தில் அதானி குழுமத்திடம் பணத்தை இழந்த மக்களுக்கு உதவ வேண்டும். அதானியுடன் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இல்லை என்பது போல் சிலர் பேசுகின்றனர். ஆனால் அதானியுடன் பல காங்கிரஸ் கட்சியினர் தொடர்பில் இருப்பது எனக்கு தெரியும். என்றும் நான் காங்கிரஸ் பற்றி கவலைப்படவில்லை. பாஜக-வின் நேர்மை நிலை நாட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் பிரியன், “எம்.பி பதவி கொடுக்கவில்லை என்பதற்காக சுப்பிரமணியன் சுவாமிக்கு பாஜக மீதும், பிரதமர் மோடியின் மீதும் அதிருப்தி இருக்கிறது. அதானி விவகாரம் குறித்து இப்போது ஏன் பேச வேண்டும். ஜெயலலிதா விவகாரம் போல முன்கூட்டியே அவர் பேசியிருக்கலாம். அவரின் பேச்சுக்கு பாஜக-விலேயே யாரும் கருத்து சொல்வதில்லை. எந்த ஆதாரத்தில் அனைத்து சொத்துக்களையும் தேசிய மயமாக வேண்டும் என்று கூறுகிறார் என தெரியவில்லை.
தற்போது தான் ஹிண்டன்பர்க் அறிக்கையை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதாக தெரிவித்திருக்கிறது. செபியும் விசாரணைக்கு அழைத்திருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நான் தேவயானை விஷயங்களை தெரிவிப்பேன் என்று அவர் கூறினால் பரவாயில்லை. மேலோட்டமாக பேசி வருகிறார். எனவே நாம் உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று தான் பார்க்க வேண்டும். சுவாமியின் பேச்சுக்கு மதிப்பு கிடையாது. அதனால் அவர் என்ன வேண்டுமானாலும் பேசுவார்.

அவர், பாஜக-வில் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து அவருக்கே தெரியவில்லை. சத்தீஸ்கர், ராஜஸ்தான் முதல்வர்கள் பல திட்டங்களை அதானியை வைத்து திறக்கிறார். எனவே தான் காங்கிரஸ் கட்சியினரும் தொடர்பில் இருக்கிறார்கள் என்று அவர் கூறுகிறார். முதல்வர்கள் விழாவுக்கு அனைத்து தொழிலதிபர்களையும் தான் அழைப்பார்கள். தனிப்பட்ட கருணை அதில் இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும்.
அதானி நிலக்கரியை ஒப்பந்தம் எடுத்துவிட்டார் என்பதற்கு அதற்கான இறக்குமதி வரியை குறைத்தும் இல்லாமல் 12 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டும் என்று தெரிவித்து கிட்டத்தட்ட ரூ.8,000 கோடிக்கு அதே தேதியில் அனுமதி கொடுக்கிறீர்களே அது என்ன கணக்கு. இதுபோல் செய்யும் போது தான் பிரச்னை வருகிறது. இப்படி, எத்தனையோ விஷயங்களை கொடுத்திருக்கிறார்கள்” என்றார்.