ஈரோடு இடைத்தேர்தல்; 5 வது முறையாக அதிமுக பிளக்ஸ் பேனர் மாற்றம்.!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதியில் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. இது தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு நடைபெறும் 4-வது தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் கடந்த முறை 8 ஆயிரத்து 904 ஓட்டு வித்யாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். இந்த நிலையில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுவதால் இந்த தொகுதியை பிடிக்க தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணியும் நடைபெற்றது. திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ‘கை’ சின்னமும், அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ‘இரட்டை இலை’ சின்னமும், தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ‘முரசு’ சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்று வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டி அந்தந்த கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளுங்கட்சியின் பலத்தில் காங்கிரசும் – எதிர்க்கட்சி அங்கீகாரத்தில் அதிமுகவும் நேருக்கு நேராக போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி வாக்குகளை பிரிக்கும் இடத்தில் நின்றாலும் கணிசமான வாக்குகளை அள்ள களத்தில் இறங்கியுள்ளது.

இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் மேற்கொள்ள பெருந்துறை சாலையில், அரசு மருத்துவ மனை ரவுண்டானா அருகே பணிமனை திறக்கப்பட்டுள்ளது. பணிமனை அமைத்த போது அதிமுக தலைமையிலான கூட்டணி என்றும், திறப்பு விழா நடந்தபோது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்றும் அதிமுகவினர் பேனர் வைத்தனர்.

பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் போது பெயரை மாற்றியது பெரும் சர்ச்சையான நிலையில், அன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி என்று பெயரை மாற்றி பிளக்ஸ் வைத்தனர். அடுத்த நாள் காலை அதையும் அகற்றிவிட்டு அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் என மாற்றினர்.

மோடி அரசு அதானியை இரண்டாவது பணக்காரனாக மாற்றி உள்ளது…!

இந்த 4 பேனர்களிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பெரிய படங்களும், கூட்டணி கட்சி என்ற முறையில் த.மா.கா. ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோரின் சிறிய படங்களும் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில் மீண்டும் 5-வது முறையாக புதிதாக பிளக்ஸ் பேனர் மாற்றி வைத்துள்ளனர். அதில் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சியின் வெற்றி வேட்பாளர் என மாற்றி பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் படமும், மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர் படமும் இடம் பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.