ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த டிசம்பர் 4ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புனு தாக்கல் கடந்த பிப்ரவரி 7ம் தேதி உடன் நிறைவடைந்த நிலையில் பிப்ரவரி 8ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் அலுவலர் சிவகுமார் வெளியிட்டுருந்தார். அதன் அடிப்படையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்த மத்திய படை வீரர்கள் வந்துள்ளனர். அதன்படி, மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை என மொத்தம் 180 வீரர்கள் ஈரோடு வந்துள்ளனர்.