சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவைஅதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று சந்தித்துபுகார் கொடுத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும் நிலையில், அதற்கு யாரும் போகக் கூடாது என்று தடுக்கும் வகையில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டனர். ஆனாலும், அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் எழுச்சியாக நடந்தது.திமுகவின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
ஆளுங்கட்சியினர் குறிப்பாக முதல்வர் மற்றும் அவரது மகன்உதயநிதி தவிர மற்ற அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் அனைவரும் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர். தேர்தலை முறைகேடாக சந்திக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். பணம், அதிகார பலத்தை கொண்டுவெற்றி பெற முயற்சித்து வருகின்றனர். இவற்றை தாண்டி இரட்டை இலை சின்னம் மகத்தான வெற்றி பெறும்.
கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. ஏற்கெனவே நிர்ணயித்த நிகழ்ச்சிக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
சசிகலாவின் குடும்பம் அதிமுகவால்தான் வெளியில் தெரிந்தது. தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் மன்னிக்காது. இரட்டை இலை சின்னத்தின் மவுசு குறைந்துள்ளதாக கூறுவது சரியல்ல.
ஈரோடு கிழக்கில் அதிகார துஷ்பிரயோகம், பண விநியோகம்குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் காவலர்களுக்குகூட பாதுகாப்பு இல்லை.பொதுமக்களுக்கு எப்படி பாது காப்பு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.