புதுடெல்லி: நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவையில் கடந்த புதன்கிழமை பேசிய எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தொழிலதிபர் அதானியின் பங்குச்சந்தை மோசடி குறித்து பிரதமர் மோடி பேசாமல் இருப்பது பற்றி கேள்வி எழுப்பினார்.
அப்போது கார்கே பயன்படுத்திய ஒருசில வார்த்தைகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அவை தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார். தான் பயன்படுத்திய வார்தையை நீக்கியது பற்றி கார்கே, நேற்று முன்தினமும், நேற்றும் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியபோது, மீண்டும் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தினார். இதனால் கார்கே தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ், ஆர்ஜேடி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வௌிநடப்பு செய்தனர்.