ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் நிலவும் குளிர்ந்த தட்பவெப்ப நிலை மலர் சாகுபடிக்கு கைகொடுப்பதால், சுமார் 1,000 ஏக்கர் பரப்பில் பசுமைக் குடில்கள் அமைத்து, தாஜ்மஹால், ரோடோஸ், நோப்ளாஸ், கோல்ட் ஸ்டிரைக், சவரன், அவலாஞ்சி, பெர்னியர் உள்ளிட்ட 8 வகையான ரோஜா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினத்துக்கு ஓசூரிலிருந்து ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, காதலர் தினத்தை முன்னிட்டு, தாஜ்மஹால், அவலாஞ்சி ரக ரோஜாக்கள், சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு 30 லட்சமும், ஐரோப்பிய நாடுகளுக்கு 10 லட்சமும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், ஓசூர் பகுதியில் கடந்த டிசம்பரில் பெய்த தொடர் மழையால் ரோஜா செடிகளில் ‘டவுனிங்’ என்ற நோய்த் தாக்கம் ஏற்பட்டு, மலர் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும், தரமற்ற ரோஜாப் பூக்கள் கிடைக்கும் நிலை ஏற்பட்டது.
ஏற்றுமதிக்கு ஏற்ற தரம் இல்லாததால், காதலர் தினத்துக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரோஜாக்களில், வழக்கத்தைக் காட்டிலும் 60 சதவீத ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் புதிய ரகங்கள் அறிமுகம் செய்யப்படும் நிலையில், இந்திய ரோஜாக்களுக்கு வரவேற்பும் குறைந்துள்ளது. இதுகுறித்து விவசாயி முனி வெங்கடப்பா கூறியதாவது: இந்திய ரோஜாவுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு குறைந்துள்ளது. இதனால், உள்ளூர் விற்பனையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. மேலும், போதிய விலையும் கிடைப்பதில்லை.
இதனால், ஓசூர் பகுதியில் விவசாயிகள் பலர் மாற்று விவசாயத்துக்கு மாறிவருகின்றனர். எனவே, பிளாஸ்டிக் மலர்கள் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடைவிதிக்க வேண்டும். மேலும், ரோஜா மலர்களைப் பயன்படுத்துமாறு வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் மலர் விவசாயத்தைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.