அம்பாசா: திரிபுராவில் காங்கிரஸ்-மார்க்சிஸ் கூட்டணியை கடுமையாக பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். கேரளாவில் இரு கட்சிகளும் மல்யுத்தம் நடத்தும் போது, திரிபுராவில் நண்பர்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார். திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் பிப்.16ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு பா.ஜ வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: தவறான நிர்வாகத்தின் பழைய வீரர்கள்(காங்கிரஸ், மார்க்சிஸ்ட்) நன்கொடைக்காக கைகோர்த்துள்ளனர். கேரளாவில் மல்யுத்தம் போராடுபவர்கள் திரிபுராவில் நண்பர்களாக உள்ளனர். எதிர்க்கட்சிகள் வாக்குகளைப் பிரிக்க விரும்புகின்றன. சில சிறிய கட்சிகளும் தங்களுக்கான விலைக்காக தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கின்றன.
கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் அரசுகள் பழங்குடியினரிடையே பிளவை உருவாக்கியது. அதே நேரத்தில் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க பாஜ வேலை செய்தது.இந்தியா முழுவதும் உள்ள பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக பாஜ பாடுபடுகிறது. எங்கள் அரசு உயர்கல்வியில் பழங்குடி மொழியான கோக்போரோக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்றிய பட்ஜெட்டில் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இடதுசாரிகள் ஆளும் மாநிலத்தில் நிறைய பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.
ஆனால் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக பாஜ உழைத்ததால் திரிபுரா பாதுகாப்பாக இருந்தது. வடகிழக்கு மாநிலத்தில் வளர்ச்சிப் பாதையைத் தொடர இரட்டை எந்திர அரசிற்கு வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இரட்டை முனைகள் கொண்ட வாள். அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்கள் மக்களுக்கு நன்மை அளிக்கும் அனைத்து திட்டங்களையும் நிறுத்த விரும்புகிறார்கள். காங்கிரசுக்கும், இடதுசாரிகளுக்கும் ஏழைகளுக்குத் துரோகம் செய்வது மட்டுமே தெரியும். பல ஆண்டுகளாக நடந்த அவர்களின் தவறான ஆட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு கட்சிகளும் ஏழைகள் ஏழைகளாக இருக்கவே விரும்புகின்றன. அவர்கள் ஏழைகளுக்காக எண்ணற்ற முழக்கங்களை வைத்துள்ளனர். ஆனால் அவர்களின் வலியை புரிந்து கொள்ளவோ அல்லது நிவர்த்தி செய்யவோ இல்லை. முன்பு, மாநிலத்தில் பெண்களின் நிலை பரிதாபமாக இருந்தது. இப்போது, அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தலையை உயர்த்திக் கொண்டு வெளியே வரலாம். திரிபுராவில் அமைதி நிலவுவதால், வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. அதேசமயம் இடதுசாரிகளும், காங்கிரசும் இளைஞர்களின் கனவுகளை சிதைத்து பலரையும் வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு இடம் பெற செய்தது. இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.