எனக்கு 40 வயது. அவருக்கு 58. திருமணமாகி 20 வருடங்கள் ஆகின்றன. திருமணமானவுடனே குழந்தைகளை, வீட்டுப் பெரியவர்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு என பிஸியாகவே இருந்துவிட்டேன். கணவரும் வேலை வேலை என்று இருந்துவிட்டார். இப்போது பிள்ளைகளெல்லாம் வளர்ந்துவிட்டதால், பொறுப்புகள் குறைந்துவிட்டன. தாம்பத்திய உறவை அனுபவித்து வாழ ஆசையாக இருக்கிறது. ஆனால், கணவரால் இயலவில்லை. என்ன செய்வது ?
– வாசகி ஒருவரின் பிரச்னை இது. தீர்வு சொல்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.

“உங்கள் ஆசையில் தவறே கிடையாது. குழந்தை வளர்ப்பு, வீட்டின் பெரியவர்களைப் பராமரிப்பது என 20 வருடங்களைக் கடந்திருக்கிறீர்கள். கடமைகளைச் செய்யும் ஆர்வத்தில் செக்ஸ் மீதான ஆர்வத்தை மறந்து இருந்திருக்கிறீர்கள். இப்போது பெரும்பாலான கடமைகளை முடித்துவிட்டதால், செக்ஸில் அனுபவித்து வாழ ஆசைப்படுகிறீர்கள். இதன் மூலம் உங்களுடைய மனமும் உடலும் பர்ஃபெக்டாக இருப்பது தெரிகிறது.
கணவருக்கு என்ன பிரச்னை என்று தெரிவிக்காமல், அவரால் இயலவில்லை என்று மட்டுமே பொதுவாகச் சொல்லி இருக்கிறீர்கள். அதனால், அவருடைய வயதில் வரக்கூடிய செக்ஸ் பிரச்னைகளுக்கு என்னென்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்.
பொதுவாக வயதாக ஆக ரத்தக்குழாய்கள் தடிமனாகி, ரத்த ஓட்டத்தில் பிரச்னை ஏற்படும். ஆணுறுப்பிலும் ரத்த ஓட்டத்தில் பிரச்னை ஏற்பட்டால் விறைப்புத்தன்மையில் கோளாறு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்த வயதில் டெஸ்டோஸ்டீரான், தைராய்டு போன்ற ஹார்மோன் பிரச்னைகளும் ஏற்படலாம். இதனாலும் அவருக்கு தாம்பத்திய உறவின் மீது விருப்பமின்மையோ, ஆணுறுப்பில் விறைப்பின்மையோ ஏற்பட்டிருக்கலாம். உங்கள் கணவருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் அல்லது வேறு ஏதேனும் உடல் நலக்குறைபாடு இருந்தாலும் இயலாமை ஏற்படலாம். பரிசோதனை செய்து பார்த்த பிறகுதான் தீர்வு சொல்ல முடியும்; மருந்தும் கொடுக்க முடியும்.

நீரிழிவு இருந்தால் மருந்து, மாத்திரை மூலம் கன்ட்ரோல் செய்தால் உங்கள் கணவருடைய பிரச்னை சரியாகும். ரத்த அழுத்தத்துக்குத் தருகிற சில மருந்துகளால்கூட விறைப்புத்தன்மை கோளாறு வரலாம். உங்கள் மருத்துவரை சந்தித்து பிரச்னையைச் சொன்னீர்களென்றால், அதற்கேற்றாற்போல மருந்தை அட்ஜஸ்ட் செய்து, பிரச்னையை சரி செய்வார். எந்தவிதமான உடற்பயிற்சியும் செய்யாமல், உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கும் செக்ஸில் ஈடுபட முடியாமல் போகலாம். உடனடியாக, உங்கள் மருத்துவரையோ அல்லது செக்ஸாலஜிட்டையோ சந்தியுங்கள். அவர்கள் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை செய்வார்கள்.
ஒருவேளை உங்கள் கணவருக்கு இருப்பது விறைப்புத் தன்மை கோளாறு என்றால், அதை சரி செய்வதற்கான மருந்துகள் இருக்கின்றன. ஆனால், அவற்றையும் டாக்டரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே சாப்பிட வேண்டும். இல்லையென்றால், உயிருக்கே கூட ஆபத்து நிகழலாம்” என்றார்.