துருக்கி நிலநடுக்க பாதிப்புக்கு மத்தியில் திருட்டில் ஈடுபட்ட 48 பேர் கைது

அங்காரா,

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த வாரம் ஓய்வு நாளான ஞாயிற்று கிழமை முடிந்து அடுத்த நாள் விடியல் தொடங்குவதற்கு முன்னரே, சோகம் ஏற்பட்டது.

துருக்கியின் எல்லையில் கடந்த வார திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் 100-க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்தம் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இதனை அடுத்து, பேரிடர் பகுதிகளுக்கு துருக்கி அதிபர் ரீசெப் தயீப் எர்டோகன் சென்று பார்வையிட்டு உள்ளார்.

இந்நிலையில், அனாடொலு செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், துருக்கியில் நிலநடுக்க பாதிப்புக்கு மத்தியில் திருட்டில் ஈடுபட்ட 48 பேர் கடந்த 4 நாட்களில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அடுத்த 3 நாட்களுக்கு இந்த கைது நடவடிக்கை தொடரும் என கூறப்படுகிறது. துருக்கி நாட்டின் தென்கிழக்கே 10 மாகாணங்களில், நிலநடுக்கம் எதிரொலியாக, 3 மாத கால அவசரகால நிலையை பிரதமர் எர்டோகன் பிறப்பித்து உள்ளார். இந்த நேரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எர்டோகன் உறுதி கூறினார்.

திருட்டு அல்லது கடத்தலில் ஈடுபடும் மக்கள் அரசின் உறுதியான கரங்களில் இருந்து தப்ப முடியாது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதேபோன்று ஆஸ்திரியா, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த மீட்பு படையினர் மேற்கொள்ளும் பணி முடங்கும் வகையில், ஹதே பகுதியில் வெவ்வேறு குழுக்களிடையே மோதல்கள் ஏற்பட்டு உள்ளன என்றும் கூறப்படுகிறது. பாதுகாப்பு குறைவை முன்னிட்டு மீட்பு நடவடிக்கைகளை ஆஸ்திரிய ராணுவம் சஸ்பெண்டு செய்துள்ளது என்றும் அந்நாட்டு பேரிடர் மற்றும் நிவாரண படை பிரிவு தெரிவித்து இருந்தது.

எனினும், மீட்பு பணிக்கு அதனுடன் தொடர்பில்லை என்றும் மீட்பு மற்றும் நிவாரண பணியை தொடர நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றும், உதவி செய்யவே விரும்புகிறோம் என்றும் ஆனால், சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது என ஆஸ்திரிய ராணுவம் கூறியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.