மதுரை: புதிய ரயில் வழித்தடங்கள் அமைத்தல், மீட்டர்கேஜ் வழித்தடங்களை அகலப்பாதைகளாக மாற்றம் செய்தல், ஒருவழிப்பாதையை இருவழிப்பாதையாக மாற்றுதல், மின்மயமாக்கல், முனைய வசதிகளை அதிகரித்தல், தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களில் கூடுதல் வசதிகள் செய்து விரிவாக்கம் செய்தல், புதிய ரயில் தொழிற்சாலைகள் அமைத்தல் என நாடு முழுவதும் ரயில்வே துறையில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் உள்ள 189 திட்டப்பணிகளில் 21,343 கி.மீ நீளத்துக்கு புதிய இருப்புப்பாதை திட்டப்பணிகள் நடக்கின்றன. கடந்த 2020 கணக்குப்படி 2,633 கிமீ இருப்பு பாதைகள் பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 18,710 கி.மீ தூரத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டு மக்கள் தொகை மற்றும் பரப்பளவை ஒப்பிடும்போது இங்குள்ள வழித்தடங்கள் மிகவும் குறைவு. தமிழ்நாட்டில் தற்போது 871 கிமீ தூரத்துக்கு 10 புதிய இருப்புப்பாதை திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.11,988 கோடி. இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் இத்திட்டங்களுக்கு ரூ.1,057 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014 முதல் இதுவரை 2 திட்டங்களுக்கு, மொத்தம் 53.2 கி.மீ தூரத்துக்கு மட்டுமே புதிய இருப்புப்பாதை அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த 2 திட்டங்களும் வரும் 2024க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம், காரியாபட்டி, அருப்புகோட்டை, பந்தல்குடி, புதூர் நாகலாபுரம், விளாத்திகுளம், குளத்தூர், மீளவிட்டான் வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கி.மீ தூரத்துக்கு புதிய பாதை அமைக்க 2011-12 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்துக்கு சரக்குப் போக்குவரத்து கையாள இருப்பதால் இந்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2023-24ல் இத்திட்டத்துக்கு ரூ.114 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே 17.2 கி.மீ தூரத்துக்கு புதிய இருப்புப்பாதை அமைக்க 2019 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கான மதிப்பு ரூ.208 கோடி. இத்திட்டம் பாஜ ஆட்சி அமைந்த 2014க்கு பிறகு தமிழ்நாட்டில் அறிவித்த 2வது புதிய இருப்புப்பாதை திட்டம். இந்த பட்ஜெட்டில் ரூ.385.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் 2025 முதல் 2030க்குள் 5,094 கி.மீ தூரத்துக்கு, 39 புதிய இருப்புப்பாதை திட்டங்களை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணி நடந்து வருகிறது. இதில் தமிழ்நாட்டிற்கு ஒரு திட்டம் கூட இல்லை. மேலும் முந்தைய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் மிகக்குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று ரயில்வேத்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.