மதுரை: இந்தியாவில் முதன் முறையாக மதுரை ரயில் நிலையத்தில் உலர் கருவாடு விற்பனை இன்று துவங்கியது. பாக்கெட் ரூ.100 முதல் ரூ.1000 வரை பல்வேறு எடை அளவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த பகுதிகளுக்கேற்ற பாரம்பரிய உணவு வகைகள், உற்பத்தி பொருட்களை ரயில் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு, பிரதமரின் ‘ஒரு ரயில் நிலையம், ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. சுற்றுலா பயணிகளாக பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் இந்திய மக்களுக்கு அந்தந்த பகுதிகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்வதற்கும், அப்பகுதி சார்ந்த பொருட்களை ரயில் நிலையத்திலேயே வாங்கிக் கொள்வதற்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு ரயில் பயணிகளிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதனடிப்படையில் மதுரை ரயில் நிலையத்தில் முதன்முறையாக “லூமிரியன்ஸ் டிரை பிஷ் ஹட்” என்னும் கருவாடு விற்பனைக் கூடம் இன்று துவங்கப்பட்டது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில், அவர்கள் எளிதில் வாங்கிச் செல்லும் வண்ணம் பல்வேறு எடை அளவுகளில் பாக்கெட் ஒன்று ரூ.100 முதல் ரூ.1000 வரை இந்த கருவாடு விற்பனை செய்யப்படுகிறது.
அவ்வகையில், இங்கு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கருவாடுகள் தயார் செய்யப்பட்டு, இந்த விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் மதுரை ரயில் நிலையத்தில்தான் முதன்முறையாக கருவாடு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.