இன்றும் ஜாக்கும், ரோஸும்தான்! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த காதல் காவியம் ‘டைட்டானிக்’!

காதலுக்கு உலகமும் முழுவதும் ஏராளமான அன்புச் சின்னங்கள் உண்டு… அந்த காதலுக்கு சினிமாவில் உள்ள அடையாளச் சின்னம் என்றால், அது ஜாக்கும், ரோஸும்தான்… ஒரு பார்வை… ஒரு ஸ்பரிசம்… ஒரு அன்பு முத்தத்தில் விளைந்த காதல் ஒன்று, ஆழியின் முத்தாய் ரசிகர்களின் ஆழ் மனதில் பதிந்திருக்கிறது என்றால், அது டைட்டானிக்தான்….

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘டைட்டானிக்’ திரைப்படம், ரீ – ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது….

110 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1912ஆம் ஆண்டு வட அட்லாண்டிக் பெருங்கலின் நியூ ஃபவுண்ட்லாந்து அருகே கடலில் மூழ்கியது, ஆர்.எம்.எஸ் டைட்டானிக் கப்பல்… பனிப்பாறையில் மோதி சிதைந்த டைட்டானிக், இரண்டே முக்கல் மணிநேரத்திற்குபின் ஆழ்கடலுக்குள் மூழ்கியது… அதில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வரலாற்றில் பெரும் விபத்தாக பதிவான இந்நிகழ்வை, தன் கனவு சினிமாவின் கருவாக மாற்றிக் கொண்டார், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்..

image

அதன் விளைவாக டைட்டானிக் கப்பலுக்குள் ஒரு காதல் கதை உருவானது… எல்லைகளையும், பேதங்களையும், விதிகளையும் தகர்ப்பதுதான் காதலின் சிறப்பு எனச் சொல்லலாம்… அப்படி ஒரு காதல் கதையை ஜாக், ரோஸ் எனும் கதாபாத்திரங்கள் மூலம் உருவாக்கினார், கேமரூன். இதில் ஜாக் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் ஸ்டார் LEONARDO DICAPRIO-வும், ரோஸ் கதாபாத்திரத்தில் KATE WINSLET-டும் நடித்தனர்…

பணக்கார குடும்பத்தில் பிறந்த ஹீரோயின், நாடோடியாகத் திரியும் ஹீரோவை டைட்டானிக் கப்பலுக்குள் சந்திக்கிறார்… இவ்விருவரும் சந்திக்கும் அந்த தருணம் தான் இதில் முக்கியமானது… வாழ்வை வெறுத்து தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்கு சென்ற ஹீரோயின், கடலில் குதிப்பதற்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்த சூழலில், அவரின் உயிரைக் காக்கும் ஹீரோ, உள்ளத்தையும் கவர்ந்து விடுகிறார். இவரும் கண்களின் மூலம் காதல் உரையாடலைத் தொடங்குகிறார்கள்… ஹீரோ ஜாக்கின் ஒவ்வொரு செயல்களும் ரோஸை கவர்ந்துவிடுகின்றன…

image

அட்லாண்டிக் கடல்பரப்பின்மேல் மிதக்கும் டைட்டானிக் கப்பலில், அழகாக மிதக்கத் தொடங்குகிறது, ஜேக்-ரோஸ் இருவரின் காதல்… ஆனால், அவர்களுக்கு வில்லனாய் வருகிறார் ரோஸின், வருங்கால கணவர் BILLY ZANE.. விஜயின் ‘கில்லி’ படத்தில் முத்துப்பாண்டியாக மிரட்டும் பிரகாஷ்ராஜைப்போல் அவரின் செயல்கள், அத்தனை அதிரடியாக உள்ளன… இந்த பிரச்னைகளை எல்லாம் கடந்து, மூழ்கப்போகும் கப்பலில் இருந்து இருவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் டைட்டானிக் கப்பல் சொல்லும் காதல் கதை… அதை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் அழகான சினிமாவாக செதுக்கியிருப்பார் கேமரூன்… சிறு பிரச்னை என்றாலே பிரேக்கப் செய்து பிரியும் 2கே கிட்ஸ்களின் காலம் இது… ஆனால், உயிர் பிரியும் ஓர் அசாதாரண சூழலில், தான் உயிராக நினைத்த பெண்ணுக்காக, தன் உயிரைக் கொடுத்த ஜாக், 90ஸ் கிட்ஸின் காதல் நாயகான கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கிறார்…

image

1997ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம், சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது…. வசூலில் இமாலய சாதனைகளை படைத்த இத்திரைப்படம், ஏராளமான விருதுகளையும் வாரிக் குவித்தது… மீசையும், மருவை வைத்து மாறுவேடம் என சொல்லப்பட்டதை ரசித்துப் பார்த்த இந்திய சினிமா ரசிகர்களுக்கு, ஒரு கப்பலே கண் முன் உடைந்து கடலில் மூழ்கும் காட்சி அனுபவம், பெரும் ஆச்சர்யத்தைத் தந்தது. எண்ணிலடங்கா சிறப்புகளைக் கொண்ட டைட்டானிக் திரைப்படம், ஆண்டுகள் கடந்தும் சினிமா வரலாற்றில் முழ்காமல் மிதந்து கொண்டிருக்கிறது. வெளியான சிறிது காலத்திலேயே மறந்துபோகும் திரைப்படங்களுக்கு இடையே, கால் நூற்றாண்டைக் கடந்து காதல் காவியமாக நிலைத்திருக்கிறது, டைட்டானிக் திரைப்படம்… டைட்டானிக் கப்பல் மூழ்கினாலும், அந்த காதல் மட்டும் மூழ்கவே இன்னும் இல்லை…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.