மேட்ரிமோனியில் வரன் தேடிய முதியவர்: ஆபாச வீடியோ எடுத்து ரூ.60 லட்சத்தை அபகரித்த பெண் – என்ன நடந்தது?

சோஷியல் மீடியா மூலம் நடைபெறும் மோசடிகள் வெகுவாக அதிகரித்து வருகிறது. இது தவிர எஸ்.எம்.எஸ். மூலம் லிங்க் அனுப்பியும் மோசடிகள் நடந்து வருகிறது. மும்பையில் திருமணத்துக்காக திருமண தகவல் இணையத்தளத்தில் பதிவு செய்து வைத்திருந்த முதியவர் ஒருவரிடம் பெண் ஒருவர் மோசடி செய்துவிட்டார். மும்பை புறநகரான அந்தேரியை சேர்ந்த முதியவர் ஒருவர் தன் மனைவி இறந்து போனதால் தனியாக வாழ்ந்து வந்தார்.

கடைசிக்காலத்தில் தன்னை கவனித்துக்கொள்ள ஒரு துணை தேவை என்று நினைத்த அந்த முதியவர் தன்னைப்பற்றிய தகவல்களை திருமண தகவல் இணையத்தளத்தில் பதிவுசெய்திருந்தார். இந்த திருமண வெப்சைட்டில் அடிக்கடி முதியவர் தனக்கு ஏற்ற வரன் கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தார். அப்படி பார்த்தபோது நான்சி என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் அடிக்கடி மொபைல் போன் மூலம் பேசிக்கொண்டனர். அதன் பிறகு வாட்ஸ் ஆப் வீடியோ காலிலும் பேசினர். அப்படி பேசிப்பேசி அவர்களுக்குள் நெருக்கம் உண்டானது. இதையடுத்து வீடியோ காலில் இருந்த போது அந்தப் பெண் முதியவரிடம் ஆடைகளை கழற்ற சொல்லி இருக்கிறார்.

ஆன்லைன் மோசடி

முதியவரும் உடைகளை கழற்றி நிர்வாண போஸ் கொடுத்திருக்கிறார். அதனை அந்தப் பெண் தன்னுடைய மொபைல் போனில் பதிவு செய்து கொண்டார். பின்னர் அந்த வீடியோவை காட்டி பணம் கொடுக்கும்படி கேட்டு, அந்தப் பெண் மிரட்டினார். “அப்படி கொடுக்கவில்லையெனில் ஆபாச வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுவிடுவேன். அந்த வீடியோவை முதியவரின் மொபைல் போனில் இருக்கும் தொடர்பு எண்கள் அனைத்துக்கும் அனுப்புவேன்” என்று மிரட்டினார். இதனால் பயந்து போன முதியவர் முதலில் அந்தப் பெண் சொன்ன வங்கிக்கணக்கிறகு பணம் அனுப்பினார். அப்படி இருந்தும் அப்பெண் விடாமல் தொடர்ச்சியாகப் பணம் கேட்டுக்கொண்டே இருந்தார்.

தொடர்ந்து ரூ.60 லட்சம் வரை அந்தப் பெண்ணுகு முதியவர் கொடுத்துவிட்டார். அப்படி இருந்தும் அந்தப் பெண் விடவில்லை. இதனால் ஏற்பட்ட மன உலைச்சல், பண விரையம் போன்றவற்றால் இது குறித்து முதியவர் சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவர் பணம் அனுப்பிய வங்கி கணக்கு யாருக்கு சொந்தம் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

சைபர் கிரைம்

இது குறித்து போலீஸார்,“ சோஷியல் மீடியாவில் தான் இது போன்ற மோசடிகள் அதிகம் நடைபெறும். ஆனால் முதல் முறையாக திருமண இணையத்தளத்தில் தகவல்களை எடுத்து அதன் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். அறிமுகம் இல்லாதவர்களின் நட்பு கோரிக்கையை ஏற்காதீர்கள். அந்தரங்க விவகாரங்கள், தனிப்பட்ட புகைப்படங்களை ஆன்லைனில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மிரட்டலாக வரும் இமெயில்களை டெலிட் செய்யாமல் ஆதாரத்துக்கு சேமித்து வைத்திருங்கள். மிரட்டல் மெயில் வந்தால் போலீஸாரிடம் தெரிவிக்கவேண்டும். போன் நம்பர், வீட்டு முகவரி, இமெயில் விபரங்களை ஆன்லைனில் பதிவிடக்கூடாது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.