சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த பிப்ரவரி 6 -ம் தேதி ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகள் ஏற்பட்டன. அவற்றில் ஒரு பின்னதிர்வு ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாகக் குலுங்கின, ஆயிரக்ககணக்கான வீடுகள் தரைமட்டம் ஆகின. உயிரிழப்புகள் இன்றுவரை 40 ஆயிரத்தை கடந்துள்ளது என்ற சோக செய்திகள் வந்து கொண்டிருகின்றன.
இந்த துயர சம்பவத்தால் நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது.. என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழுந்துள்ளது. அதற்கு பதில் காணும் முன்னர் நிலப்பரப்பின் அமைப்புகளையும் தன்மைகளையும் நாம் முதலில் தெரிந்துகொள்வோம்.
பூமிப்பந்தின் மையப் பகுதியை அடைய 6370 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். இந்தப் பகுதியில் புவியீர்ப்பு சக்தி மிக மிக அதிகமாக உள்ளது. இதனால் இங்கு உள்ள உலோகப் பொருட்கள் திட நிலையில் உள்ளது. ஆனால் இதனைச் சுற்றியுள்ள உலோகப் பொருட்கள் திரவ நிலையில்தான் உள்ளது. இதன் வெப்பநிலை சுமார் 5200 டிகிரி செல்சியஸ் ஆகும்.

மண்ணும் பாறையுமான பூமியின் மேற்பரப்பு, ஏழு பெரிய துண்டுகளாக இந்த கொதிக்கும் திரவப் பொருள் மேல் மிதந்தபடி உள்ளது. இந்த துண்டுகளைப் பூமியின் மேல் ஓடுகள் (tectonic plates) என அழைக்கப்படுகிறன. இதனை ஆப்பிரிக்க, அண்டார்டிக்கா, யூரேசியா, தென் மற்றும் வட அமெரிக்க, பசிபிக், இந்திய-ஆஸ்ரேலிய மேலோடுகள் எனப் பெயரிட்டுள்ளனர். இந்த மேலோடுகளைத்தான் நாம் ஏழு கண்டங்கள் எனக் கூறுகிறோம்.
பூவியலாளர்கள் பெரிய இந்திய-ஆஸ்ரேலிய மேலோட்டைப் பிரித்து, இந்திய மேலோடு மற்றும் ஆஸ்ரேலிய மேலோடு என்றும் வகைப்படுத்துகின்றனர். அதாவது இந்த ஏழு மேலோடுகள் எனப்படும் கண்டங்கள் கடலில் பெரிய கப்பல்கள் மிதப்பது போல் இவைகள் கொதிக்கும் உலோகத்தில் மிதக்கின்றன என்பதனை மறக்கக்கூடாது.
இவை ஒரே இடத்தில் மிதப்பதில்லை. மாறாக பல கோடி ஆண்டுகளாக இவை நகர்ந்தபடியேதான் இருக்கிறது. சில வேகமாகவும் சில மிகவும் மெதுவாக நகர்கின்றன. இவை ஒரு வருடகாலத்தில் சுமார் பத்து சென்டிமீட்டர் வரை நகர்கிறது.

இந்தியத் துணைக்கண்டம் வேகமாக நகர்ந்து யூரேசியாவுடன் மோதியதால்தான் இமயமலையே உருவானது! இந்த கண்டங்கள் நகர்வதால்தான் உயர்ந்த மலைகளும், பயங்கர பூகம்பமும், அபாயகரமான எரிமலைகளும் உருவாகியுள்ளன.
கண்டங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகியபடி நகர்ந்தால், இரு கண்டங்களின் விளிம்பு பகுதியில் பல சிறிய ரக எரிமலைகளும் சிறுசிறு பூகம்பங்களும் ஏற்படும்! இதனால்தான் பசிபிக் கடற்கரைப் பகுதியில் நிறைய எரிமலைகள் காணப்படுகின்றன. இங்கே அடிக்கடி நிலநடுக்கங்களும் வருகின்றன. இதனால் இந்தப் பகுதியை நெருப்பு வளையம் (ring of fire) என அழைக்கப்படுகிறது.
அதே நேரத்தில் கண்டங்கள் ஒன்றுடன் ஒன்று மோதவும் செய்கின்றன. இவ்வாறு ஜப்பான் நாட்டுப் பகுதிகளில் கண்டங்கள் இன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுதான் இருக்கிறது. இதனால்தான் ஜப்பானில் அதிக அளவில் நிலநடுக்கத்தால் பாதிப்பு வருகிறது.

மேலும் ஜப்பானில் அதிகமாக வெப்ப நீரூற்றுக்களும் எரிமலைகளும் காணப்படுகிறன. ஜப்பானில் இயற்கையாக அமைந்துள்ள வெப்ப நீரூற்றுகள் பசுமை நிறைந்த அடர்ந்த அழகிய காடுகளில் காணப்படுகின்றன.

ஜப்பானில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாகக் குளிக்கும் வகையில் வசதியாக இந்த வெப்ப நீரூற்றுகளைச் சீர்செய்து வைத்துள்ளனர். இந்த நீரூற்றுக்களில் ஆடையின்றி குளிப்பதுதான் இங்கு வழக்கம்! தொடர் பனிப் பொழிவால் குளிரெடுக்கும் ஜப்பானில், பசுமை நிறைந்த காட்டில் உள்ள இந்த வெப்ப நீரூற்றில் குளிக்க இதமாக இருக்கும்.

நெல்லையில் பிறந்து ஜப்பானில் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவரும் கணேஷ் பாண்டியன் நமச்சிவாயம் பணியாற்றி வருகிறார். இவர் 2018 -ம் ஆண்டு ஜப்பான் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் உருவப் படத்தை முன்னிலையில் வைத்து ஒரு பன்னாட்டு அறிவியல் மாநாட்டை நடத்தினார். நானும் சென்றிருந்தேன். அப்போதுதான் இந்த வெப்ப நீரூற்றில் குளிக்க வாய்ப்பு கிடைத்தது.
இரண்டு கண்டங்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு நகரவும் செய்யும். இதனால் உரசிக் கொள்ளும் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த வகை நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான கலிபோர்னியா பசிபிக் கடற்கரை ஓரத்தில் இருக்கிறது. இங்கு இந்த வகை நிலநடுக்கத்திற்குச் சாத்தியக்கூறுகள் அதிகம். இந்தவகை நிலநடுக்கம்தான் சில நாட்களுக்கு முன் சிரியா மற்றும் துருக்கியைத் தாக்கியது.

நிலநடுக்கத்தின் வலிமை ரிக்டர் அளவில் (Richter scale ) அளக்கப்படுகிறது. நிலநடுக்கம் ரிக்டர் அளவு இரண்டுக்கு கீழ் இருக்குமானால் நம்மால் உணர முடியாது. இதனை நிலநடுக்கத்தை அளக்கப் பயன்படும் கருவியான சிஸ்மோமீட்டரால் (Seismometer) மட்டுமே கண்டறிய முடியும்.

-
நிலநடுக்கம் இரண்டிலிருந்து மூன்று ரிக்டர் அளவில் இருந்தால் கட்டி தொங்கவிடப்பட்ட மின்விசிறிகள் மற்றும் விளக்குகள் ஆட தொடங்கும்.
-
மூன்றிலிருந்து நான்கு ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஒரு பெரிய லாரி வேகமாகச் செல்லும் போது ஏற்படும் அதிர்வை ஏற்படுத்தும்.
-
நடுக்கம் நான்கிலிருந்து ஐந்து ரிக்டர் அளவில் சன்னல்கள் உடையத் துவங்கும்.
-
ஐந்திலிருந்து ஆறு ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் சிமெண்டு பூச்சிகள் கழன்று விழும் மற்றும் சன்னல் கண்ணாடிகள் நொறுங்கும்.
-
ஆறிலிருந்து ஏழு ரிக்டர் அதிர்வில் தரமற்ற கட்டங்கள் தரைமட்டமாகும். வலுவான கட்டங்கள் உடைய ஆரம்பிக்கும்.
-
ஏழிலிருந்து எட்டு ரிக்டர் நிலநடுக்கத்தில் அஸ்திவாரத்திலிருந்து கட்டடம் நகரும் பின்னர் இடிந்து விழும். மற்றும் பாதாளச்சாக்கடை உள்ளிட்ட பூமிக்குள் புதைத்து வந்துள்ள குடிநீர் குழாய்கள் அனைத்து நொறுங்கும்.
-
எட்டிற்கு மேல் இருந்து ஒன்பது ரிக்டர் நிலநடுக்கத்தில் வலுவாகக் கட்டப்பட்ட பாலங்களும் கட்டடங்களும் தரைமட்டமாகும்.
-
ஒன்பது ரிக்டர் அளவிற்கு மேல் பூமில் ஏற்படும் நடுக்கத்தைக் கண்ணால் காணலாம். அனைத்து கட்டங்களும் தரைமட்டமாகும் மற்றும் மலைகள் கூட உடைந்து சரிய ஆரம்பிக்கும்.

சிரியா மற்றும் துருக்கியைத் தாக்கிய இந்த நிலநடுக்கத்தின் வலிமை 7.8 ரிக்டர் அளவாக இருந்தது. இதனால் பல ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாயின. இது கடந்த சில நூற்றாண்டுகளில் நடந்த மிகவும் மோசமான நிலநடுக்கமாகும்.
1138 ஆம் ஆண்டு அலிப்போ (Aleppo) என்ற சிரியாவின் நகரை ஒரு பூகம்பம் தரைமட்டமாக்கியதாக வரலாறு கூறுகின்றது. மேலும் 1999 ஆண்டு சிரியாவில் லெஸ்மிட் (İzmit) என்ற நகரில் ஏற்பட்ட பூகம்பம் பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துள்ளது.
அரேபியத் தீபகற்பம் வடக்கு நோக்கி நகர்கிறது. ஆனால் யுரேசிய கண்டம் மேற்கு நோக்கிப் பயணிக்கிறது. இவை இரண்டும் உராய்ந்ததால்தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க நாட்டில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் லெமான்ட் டோகெதி ( Lamont-Doherty Earth Observatory) என்ற பூமி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புவி தொழில்நுட்பத்துறை உள்ளது. இதன் தலைவர் பேராசிரியர் Y. சீனிவாசனிடம் இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் நிலநடுக்கத்தின் வாய்ப்பு பற்றிக் கேட்டதற்கு, “அவர் இந்தியத் தீபகற்பம் வடக்கு நோக்கி நகருவதால், தெற்கே இமயமலைத் தொடரிலும், அஸ்ஸாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களும், வடமேற்கு மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களும் அதிக நிலநடுக்கம் வர வாய்ப்புள்ள பகுதிகளாகும்” என்றார்.
மேலும் தமிழகத்தில் தாமிரபரணி திருநெல்வேலி மற்றும் பவானி ஆற்றுப்பகுதிகளில் பூமியின் மேல் ஓடுப்பகுதி வலுவானதாக இல்லை, திருநெல்வேலி, பவானி, சென்னை பூகம்பம் வர வாய்ப்புள்ள பகுதிகளாகும் என்றார். எனவே இந்தப் பகுதிகளிலும் ரிக்டர் அளவில் நான்கு வரையிலான நிலநடுக்கத்திற்குச் சாத்தியக்கூறுகள் உள்ளன எனக் கூறினார்.
பூகம்பம் எப்போது வரும் எனக் கணிக்கக் கருவிகள் எதுவும் இல்லை. இத்தகைய கருவியைக் கண்டறிந்தால் லட்சக்கணக்கான உயிரைக் காப்பாற்றலாம். யார் இந்த மகத்தான கண்டுபிடிப்பை செய்வார்கள் எனப் பார்ப்போம்.

இதே மாதிரி எதிர்பாராத வகையில் எரிமலை வெடித்துச் சிதறுவது பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் தூங்கும் எரிமலை வெடிக்கப் போவதை முன்னரே கணிக்கும் வழி முறையைக் கண்டறிந்துள்ளனர். அதாவது பூமிக்குக் கீழிருந்து வெப்பமான லாவா மேல் நோக்கிப் பயணிப்பதால் அந்த எரிமலை வாய்பகுதி மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் மேல் கீழ் மற்றும் அனைத்து புறங்களிலும் இட நகர்வுகள் ஏற்படுகிறது. இதனைக் கவனித்து எரிமலை வெடிக்கப் போவதைக் கணிக்கிறனர். மேலும் தூங்கும் எரிமலையின் தற்போதைய நிலையையும் இவ்வாறு கண்டறிகின்றனர்!
சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்களைப் பார்க்கும் போது, “மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பூகம்பம் வர அதிகம் வாய்ப்புள்ள இடங்களில் இதேமாதிரியாக இட நகர்வுகள் ஏற்படுகிறதா?” என செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் கொண்டு ஆராய்ச்சி செய்யவேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. இதனால் பூகம்பம் வரப்போவதைக் கணிக்க வாய்ப்புள்ளதா? எனச் சிந்திக்க வேண்டும். எப்படியாவது பூகம்பத்தை முன்னரே கணிக்க ஒரு கருவி விரைவில் கண்டறிய வேண்டியது அவசியமாகும்.