சென்னை: “மாயனூர் காவிரியாற்றில் உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் போதாது. ஒவ்வொரு மாணவியின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும்” என்று தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 பேர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆசிரியர்களை நம்பித்தான் பள்ளி மாணவ, மாணவிகளை பெற்றோர் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். மாணவர்களுக்கு எதுவும் நடக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது உடன் செல்லும் ஆசிரியர்களின் பொறுப்பும் கடமையும். ஆனால், இங்கு 4 மாணவிகள் உயிரிழந்திருப்பதற்கு ஆசிரியர்களின் கவனக்குறைவே காரணம். மாணவிகள் ஆற்றில் இறங்குவதைத் தடுக்காமல் அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது பள்ளிக் கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிள்ளைகளை இழந்து பெற்றோர்கள் கதறுவதைப் பார்த்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இனி இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாத வண்ணம் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் போதாது. ஒவ்வொரு மாணவியின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கரூர் அருகே மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 4 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர். இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, ஆசிரியர் ஜெபசேகயு எப்ராகிம் மீது மாயனூர் போஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்து மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தி குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர். இதனிடையே, பள்ளி மாணவிகள் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தார்.