சேலம்: பொதுமக்கள் வழங்கும் மனுக்களை காகிதமாக பார்க்காமல் அவர்களின் எதிர்காலமாக பார்த்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சேலத்தில் நடந்த 4 மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டத்தில், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சேலம் வந்தார். அன்றைய தினம், ஓமலூர் தாலுகா அலுவலகம், சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் திடீர் ஆய்வு செய்த முதல்வர், 4 மாவட்ட விவசாயிகள், தொழில்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர், சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து 2வது நாளான நேற்று காலை, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் வாயிலாக, அரசின் திட்டங்கள் மக்களை எந்த அளவிற்கு சென்றடைந்துள்ளன, அவற்றை நிறைவேற்றுவதில் இருக்கக்கூடிய சிரமங்கள் என்ன, அந்த சிரமங்களை குறைக்கும் வழிகள் என்ன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மக்கள் தங்கள் குறைகளை, தேவைகளை, அரசு தீர்த்திடும் என்ற நம்பிக்கையில் மனுக்களாக நம்மிடத்தில் வழங்குகிறார்கள்.
அவற்றை, நாம் வெறும் காகிதங்களாக பார்க்காமல் ஒருவரின் வாழ்வாக, எதிர்காலமாக கருதி பார்க்க வேண்டும். எனவேதான், இதன் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி “முதல்வரின் முகவரி” என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களாட்சி தத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள இந்த அரசு, அவர்களின் குறைகளைத் தீர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
பட்டா மாறுதல் தாமதமின்றி, எவ்வித அலைக்கழிப்பும் இன்றி நடைபெறுவதை மாவட்ட கலெக்டரும், வருவாய் அலுவலரும் உறுதி செய்ய வேண்டும். பெரிய திட்டங்களை மக்களுக்காக அரசு நிறைவேற்றி வரும் வேளையில், மக்களுக்கு தேவையான இதுபோன்ற அடிப்படையான அரசு சேவைகள் வழங்கப்படுவதில் ஏற்படக்கூடிய தாமதங்கள் மக்களிடம் நல்ல பெயரை பெற்றுத் தராது. ஆகலே அதில் கவனமாகப் பணியாற்றுங்கள். சார்நிலை அலுவலர்களை ஆய்வு செய்து, தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என கண்காணியுங்கள். குறிப்பாக, கிராமப்புற மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும்.
இருக்க வீடு, நடக்க சாலை, குடிக்க தண்ணீர், இரவில் தெருவிளக்கு, படிக்கப் பள்ளி, கிராம சுகாதாரம் இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவற்றை தரமாக வழங்குவதில் என்ன சிரமம் இருந்தாலும் அவற்றை தீர்த்து முன்னேற்றம் காண வேண்டும். அதிகாரிகள் தான் அரசின் முகமாக மாவட்டத்தில் பணியாற்றக்கூடியவர்கள். அதிகாரிகளின் திறமை, கடின உழைப்பில்தான், உங்கள் மாவட்ட மக்களுடைய உயர்வை காணமுடியும். இதனை மறக்காமல் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
சேலத்தில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த, பல்வேறு துறை பிரதிநிதிகளை சந்தித்துப் பேசும்போது, விவசாயிகள், சிறுதானிய உற்பத்தியாளர்கள் மற்றும் மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சில முக்கியமான கருத்துக்களைத் தெரிவித்தனர். அவற்றை அரசு வேளாண்மை துறைச் செயலாளரும், மாவட்ட அளவில் கலெக்டர்களும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேண்டும் என்பது அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்று. விவசாயிகளின் வாழ்வு வளமானால்தான், மாநிலம் வளரும். எனவே, வேளாண் திட்ட செயலாக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இந்த மண்டலத்தில், சேலம், ஓசூர் என வேகமாக வளரக்கூடிய 2 மாநகராட்சிகள் உள்பட பல நகராட்சி பகுதிகள் உள்ளன. இங்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதால் மக்கள் தொகை உயர்வும் காணப்படுகிறது. எனவே, குப்பைகளை விரைந்து அகற்றுதல், கழிவு நீர் தேங்காமல் தூர்வாருதல், பழுதான சாலைகளை சீர் செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் பல்லாயிரம் மக்கள் பயன்பெறுவார்கள். கல்வி, சுகாதாரம் போன்ற ஒவ்வொரு துறையிலும் உள்ள திட்டங்களை கவனமாக ஆய்வு செய்து, மாவட்ட மக்கள் பயன்பெறச் செய்ய வேண்டும்.
அதிகாரிகளின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணிகள் பட்டியலில், ஆதிதிராவிடர், பழங்குடியின மற்றும் விளிம்பு நிலை மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் முதலிடம் பெறவேண்டும். அவர்களுக்கான வீட்டுவசதி, தொழில் முனைவோர் திட்டங்கள், கல்வி உதவித்தொகை வழங்குதல், பள்ளி, கல்லூரி விடுதிகள் ஆகிய பலவற்றிலும் சார்நிலை பணியினை கண்காணிக்க வேண்டும். சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகளில் வரக்கூடிய அரசு திட்டங்கள் தொடர்பான விமர்சனங்களை புறந்தள்ளாமல், உண்மையான குறைபாடுகள் இருந்தால் அவற்றை களைந்திடவேண்டும். பல்வேறு தேவைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களிடம் கனிவாக, பொறுமையாக நடந்து கொண்டு, அவர்களின் கோரிக்கைகளுக்கு பொறுப்பாக பதிலளிக்க வேண்டும்.
ஒரு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஏதேனும் ஒரு தேவைக்கு ஒருவர் வரும்போது,அங்கு அவர் எதற்காக வந்துள்ளார்? அதை யார் செய்வார்? அதற்கான மனு விபரங்களின் தேவை என்ன? ஆகியவை குறித்து பதில் கூற தற்போது யாரும் இல்லை. இதனை சரி செய்ய வேண்டும். காவல் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வரவேற்பாளர் உள்ளதை போல, பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள பிற துறைகளும் மேற்கொள்ளலாம். மக்கள் நலன் கருதியே அனைத்துத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை கொண்டுசேர்க்கும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. அதனை காலத்தே செய்ய வேண்டும். இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், காந்தி, மதிவேந்தன், தலைமைச் செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர்கள் பிரபாகர், சந்தீப் சக்சேனா, சிவ் தாஸ் மீனா, குமார் ஜயந்த், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், மாவட்ட கலெக்டர்கள் சேலம் கார்மேகம், நாமக்கல் ஸ்ரேயா சிங், தர்மபுரி சாந்தி மற்றும் கிருஷ்ணகிரி தீபக் ஜேக்கப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.